பிரித்தானியா, ஸ்பெயின், போர்த்துக்கல், அமெரிக்கா நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய் : பாலியல் ரீதியாக பரவுகிறதா ? - News View

About Us

About Us

Breaking

Thursday, May 19, 2022

பிரித்தானியா, ஸ்பெயின், போர்த்துக்கல், அமெரிக்கா நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய் : பாலியல் ரீதியாக பரவுகிறதா ?

கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவி முழு உலகையுமே கதிகலங்க வைத்துள்ள நிலையில் தற்போது பிரித்தானியா, ஸ்பெயின், போர்த்துக்கல், அமெரிக்கா நாடுகளில் குரங்கு அம்மை என அழைக்கப்படும் அரிய வைரஸ் நோய் பரவுவது முதல் தடவையாக கண்டறியப்பட்டுள்ளது.
 
பிரிட்டனில் கடந்த வாரம் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. ஆப்ரிக்காவில் இருந்து திரும்பியவர்களிடம் இருந்து இந்த நோய் பரவியிருக்கலாம் என கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த நோய் ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் பரவி 40 க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளது. மாட்ரிட்டில் மட்டும் 23 பேருக்கு இந்த குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் ஒருவருக்கு குரங்கு அம்மை ஏற்பட்டுள்ளது. அவர் சமீபத்தில் கனடாவில் இருந்து திரும்பியதாக கூறப்படுகிறது.

இந்த நோய் அதிக அளவில் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் இது பாலியல் ரீதியாக பரவலாம் என கூறப்படுகிறது. 

நோயினால் பாதிக்கப்பட்டோர் பயன்படுத்திய பொருட்களை உபயோகிப்பதன் மூலம் பரவலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகம் புதன்கிழமை (18.5.2022) செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்பெயினில் மேற்படி வைரஸ் தொற்று ஏற்பட்ட 8 பேர் கண்டறியப்பட்டு தீவிர கண்காணிப்பின் கீழ் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஓரினச்சேர்க்கை அல்லது இருபாலின சேர்க்கையில் ஈடுபட்ட ஆண்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதேசமயம் போர்த்துக்கல் மருத்துவமனைகளில் 5 ஆண்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அங்கு மேற்படி தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் 15 பேர் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

வைரஸ் தொற்றுக்குள்ளான அனைவரும் இளைஞர்கள் எனவும் அவர்களுக்கு எவ்வாறு மேற்படி வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்பது கண்டறியப்படவில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

பிரித்தானியாவில் 7 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 6 பேர் அந்தத் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பைக் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.

அத்துடன் அமெரிக்க சுகாதார அதிகாரிகள் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பு கொண்ட 6 பேரை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

இதுவரை காலமும் மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவிற்கு பயணம் செய்து திரும்புபவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்குமே குரங்கு அம்மை ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டு வந்திருந்தது.

இந்த வைரஸைக் காவும் அணில்கள் போன்ற விலங்கினங்களுடன் நேரடி தொடர்பு வைத்திருப்பதன் மூலம் இந்த வைரஸ் பரவுவது வழமையாகும். எனினும் இந்தத் தொற்று ஏற்பட்டவருடன் நெருங்கிப் பழகுபவர்களுக்கும் இந்தத் தொற்று ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது.

இந்நிலையில் முதல் தடவையாக மேற்படி வைரஸ் தொற்று பரந்தளவில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் நிபுணர்கள், இந்த வைரஸ் மேலும் உலகளாவிய ரீதியில் பரவும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுவதாகக் கூறுகின்றனர்.

குரங்கு அம்மையால் ஏற்படக் கூடிய நோய் பாதிப்பு பொதுவாக் குறைவாக உள்ள போதும் அந்த வைரஸ் தொற்று உயிராபத்து மிக்க ஒன்றாக மாறும் அபாயத்தைக் கொண்டுள்ளதாக மேற்படி நிபுணர்கள் கூறுகின்றனர். 

இந்த வைரஸ் தொற்றானது அந்தத் தொற்றுக்குள்ளானவர்களில் 10 சதவீதமானவர்களைக் கொல்வதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment