அட்டுலுகம சிறுமி ஆய்ஷா படுகொலை : சந்தேகநபருக்கு விசேட பாதுகாப்பின் கீழ் விளக்கமறியல் : ஆறு குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குப்பதிவு : எந்த சட்டத்தரணியும் மன்றில் ஆஜராகவில்லை - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 31, 2022

அட்டுலுகம சிறுமி ஆய்ஷா படுகொலை : சந்தேகநபருக்கு விசேட பாதுகாப்பின் கீழ் விளக்கமறியல் : ஆறு குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குப்பதிவு : எந்த சட்டத்தரணியும் மன்றில் ஆஜராகவில்லை

(எம்.எப்.எம்.பஸீர்)

பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டுலுகம பெரிய பள்ளிவாசல் அருகே வசித்த 9 வயதான பாத்திமா ஆய்ஷா அக்ரம் எனும் சிறுமியின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை நாளை முதலாம் திகதி வரை விளக்கமரியலில் வைக்க பாணந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தர்விட்டுள்ளது. பாணந்துறை நீதிவான் ஜயருவன் திஸாநாயக்க இதற்கான உத்தரவை இன்று ( மே 31) பிறப்பித்தார்.

அட்டுலுகம, முஸ்லிம் கொலனியைச் சேர்ந்த 'பல்லி குட்டி' என்ற பெயரால் அறியப்படும் சிறுமியின் தாய் வழி உறவுக்காரரான 29 வயதான மொஹம்மட் பாரூக் என்பவரையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரை, குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் விதிவிதாங்கள் பிரகாரம் 48 மணி நேரம் தடுத்து வைக்க பாணந்துறை நீதிமன்றம் அனுமதித்திருந்த நிலையில், அவ்விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் இன்று மன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

சந்தேகநபருக்கு எதிராக மனிதப் படுகொலை, கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தமை, திட்டமிட்டு அசெளகரியம் ஏற்படுத்தியமை, காயம் ஏற்படுத்தியமை மற்றும் திட்டமிட்டு பலாத்காரம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபரை விசேட பாதுகாப்பின் கீழ் விளக்கமறியலில் வைப்பதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

சந்தேகநபர் இன்று மன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது அவர் சார்பில் எந்த சட்டத்தரணியும் மன்றில் ஆஜராகவில்லை.

இந்நிலையில் சந்தேகநபரை நாளை (1) வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

கடந்த 27ஆம் திகதி தனது வீட்டில் இருந்து கோழி இறைச்சி கொள்வனவு செய்வதற்காக சுமார் 200 மீற்றர் தூரத்தில் உள்ள இறைச்சி கடைக்கு சென்றிருந்தபோது பாத்திமா ஆய்ஷா எனும் சிறுமி காணாமல் போயிருந்தார்.

இதனையடுத்து பண்டாரகம பொலிஸ் நிலையத்திற்கு அன்றையதினம் மாலை 04.16 மணிக்கு பெற்றோர் செய்த முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி சிறுமியை தேடும் நடவடிக்கைகள் 24 மணி நேரம் கடந்த நிலையில் கடந்த 28ஆம் திகதி மாலை வேளையில் சிறுமியின் சடலம் சதுப்பு நில பகுதியில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டது.

சி.சி.டி.வியின் காட்சிகளை மையப்படுத்திய பகுப்பாய்வுகளை தொடர்ந்து சிறுமியின் வீட்டை அண்மித்த சதுப்பு நிலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது இவ்வாறு சடலம் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடிக்கப்ப்ட்டது.

இந்நிலையில் சிறுமியின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.

நீதிமன்ற உத்தரவிற்கமைய சட்டவைத்திய நிபுணர்கள் மூவரை உள்ளடக்கிய சிறப்பு குழுவால் இந்த பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

நேற்று (30)முற்பகல் 09.30 மணிக்கு ஆரம்பித்த பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் சுமார் 04 மணி நேரம் நீடித்து பிற்பகல் 01.30 மணியளவில் நிறைவுற்றிருந்தது.

பிரேத பரிசோதனை பிரகாரம் சிறுமியின் மரணத்திற்கு வாய், மூக்கு வழியே சேறு, நீர் என்பன உட்சென்று நுரையீரல் மற்றும் உடல் உள்ளுறுப்புக்களில் கலந்தமை பிரதான காரணம் என சட்ட வைத்திய அதிகாரிகள் குழாம் தீர்மானித்துள்ளது.

அது தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பித்துள்ள அந்த குழாம் சிறுமி பாலியல் வன்புனர்விற்கு உள்ளாகவில்லை என்பதை உறுதி செய்துள்ளதுடன், சிறுமியின் உடலில் ஒரேயொரு காயத்தை மட்டும் அடையாளமிட்டுள்ளனர். அது சிறுமியின் வாய் பகுதியில் அடையாளம் காணப்பட்ட காயம் என அறிக்கை ஊடாக அறிய முடிகிறது.

இந்நிலையில், பண்டாரகம பொலிஸ் நிலைய குழு, களுத்துறை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு, பாணந்துறை வலய குற்றத் தடுப்பு பிரிவு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மனித படுகொலைகள் தொடர்பிலான விசாரணை பிரிவு உள்ளிட்டவை இணைந்து இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment