உரம் கிடைக்கும் வரை பார்த்துக் கொண்டிருக்காது பயிர்ச் செய்கையில் ஈடுபடுங்கள் : 7 பிரதான நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பு என்கிறார் மஹிந்த அமரவீர - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 31, 2022

உரம் கிடைக்கும் வரை பார்த்துக் கொண்டிருக்காது பயிர்ச் செய்கையில் ஈடுபடுங்கள் : 7 பிரதான நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பு என்கிறார் மஹிந்த அமரவீர

(எம்.மனோசித்ரா)

உலக உணவு நெருக்கடியை எதிர்கொள்வதற்காக விவசாயத்தினை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. எனவே உரம் கிடைக்கும் வரை பார்த்துக் கொண்டிருக்காமல், உரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பயிர்ச் செய்கையில் ஈடுபடுமாறு விவசாயிகளிடம் கேட்டுக் கொள்வதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இரசாயன மற்றும் சேதன உரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக 7 பிரதான நாடுகளிடம் எழுத்து மூலம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவுடன் இதன்போது நேரடி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் உணவு உற்பத்தி மற்றும் விவசாயத்தை ஊக்குவிப்பது தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டது.

உலகலாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியை எதிர்கொள்வதை இலக்காகக் கொண்டு இவ்விடயம் தொடர்பில் பரந்தளவில் ஆராயப்பட்டது.

அதற்கமைய உள்நாட்டில் விவசாயத்தினை மேம்படுத்துவதற்காக இரசாயன மற்றும் சேதன உரத்தினைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் 7 பிரதான நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த 7 நாடுகளினதும் இலங்கைக்கான தூதுவர்களிடம் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக இந்தியாவிடமிருந்து 65000 மெட்ரிக் தொன் இரசாய உரத்தினைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருடனும், இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவுடனும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் நாளை (இன்று) பிரத்தியேக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளேன்.

அத்தோடு விதை நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவோருக்கு நிவாரண அடிப்படையில் உரத்தினை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரிசி தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வருடத்தில் இதுவரையில் 338000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. உலகில் அரிசியின் விலை அதிகரிப்பதற்கு முன்னர் மேலும் தேவையானளவு அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.

இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசியை நிவாரண விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோன்று உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசியை அரசாங்கம் நேரடியாக அதிக விலைக்கு பெற்று மக்களுக்கு நிவாரண விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்த வருடத்திலேனும் அரிசி இறக்குமதியை முற்றாக தவிர்ப்பதை இலக்காகக் கொண்டு நெற் பயிர்ச் செய்கையை விவசாயிகள் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்.

எனவே உரம் கிடைக்கப் பெறும் வரை பார்த்துக் கொண்டிருக்காமல், உரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பயிர்ச் செய்கையில் ஈடுபடுமாறு விவசாயிகளிடம் கேட்டுக் கொள்கின்றோம். பயிர்ச் செய்கையின் போது விவசாயிகள் நஷ்டத்தினை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் என்றார்.

No comments:

Post a Comment