தமது இராஜாங்க அமைச்சர் பதவி மற்றும் பொலன்னறுவை மாவட்ட பொதுஜன பெரமுன தலைமைத்துவ பதவியில் இருந்து விலகுவதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிவித்துள்ளார்.
மே 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பதவிகளில் இருந்து விலகுவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் உர மானியத்தை வழங்குவதற்கும் வலியுறுத்துவதாக தெரிவித்து தான் பதவி விலகுவதாக தலைப்பிட்டு குறித்த கடிதத்தை ஜனாதிபதிக்கு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
5 பக்கங்கள் கொண்ட நீண்ட கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள ரொஷான் ரணசிங்க, தமது பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதியிடம் முன்வைப்பதற்குக்கூட சந்தர்ப்பம் வழங்கப்படாமை குறித்து தாம் மிகுந்த வருத்தமடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் விவசாயிகள் பெரும்பான்மையாக வாழும் தனது மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் பொதுமக்களின் போராட்டம் நாளுக்குநாள் வலுவடைந்து வருகின்றது.
இந்த பின்னணியில் ரொஷான் ரணசிங்கவின் பதவி விலகல் குறித்த அறிவிப்பானது அரசாங்கத்திற்கும் மேலும் கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை பாதுகாப்பு பிரிவின் ஆலோசனைக்கமைய இன்று (02) இடம்பெறவிருந்த விவசாய சம்மேளன கூட்டம் இடம்பெறாது என, அவர் இறுதியாக நேற்றைய தினம் (02) தனது பேஸ்புக் கணக்கில் பதிவு ஒன்றை இட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment