(இராஜதுரை ஹஷான்)
மிரிஹான போராட்டம் அரசியல் அடிப்படைவாத செயற்பாடு என்பதை அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ தீர்மானமாக அறிவிக்கிறேன். தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் அரசியலமைப்பிற்குட்பட்ட தீர்மானங்களை செயற்படுத்தும். போராட்டத்தை முடக்க அரசாங்கம் ஜனநாயக கொள்கைக்கு முரணாக செயற்படவில்லை. ஜனநாயகத்திற்கு முரணான போராட்டம் முழு நாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவில் வெள்ளிக்கிழமை (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஜனநாயக முறைக்கு அப்பாற்பட்ட போராட்டங்கள் அரசாங்கத்திற்கும், நாட்டு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிடும் நோக்கில் நேற்றுமுன்தினம் இரவு மிரிஹான பகுதியில் இடம்பெற்ற போராட்டம் அரசியல் வரலாற்றில் என்றும் இடம்பெறாத ஒரு சம்பவமாக பதிவாகியுள்ளது. இதனை பொதுமக்களின் சாதாரண போராட்டம் என ஒருபோதும் கருத முடியாது.
'அரபு வசந்தம்' என்ற சொற்பதம் ஒரு மதத்தையும், இனத்தையும் அடையாளப்படுத்துவதாக அமையாது. மிரிஹான போராட்டம் குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் அடிப்படைவாத செயற்பாடு என குறிப்பிடப்பட்டுள்ளமை தற்போது வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது.
அடிப்படைவாதம் என்ற சொற்பதத்தை கொண்டு இல்லாத பிரச்சினையை உருவாக்கிக் கொள்ள விரும்பவில்லை. மிரிஹான சம்பவம் அரசியல் அடிப்படைவாத செயற்பாடு என்று அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ தீர்மானமாக அறிவிக்கிறேன்.
கடந்த வாரம் நுகேகொட பகுதியில் இடம்பெற்ற அரசியல் கட்சியின் பிரசார கூட்டத்தின் போது குறிப்பிடப்பட்ட விடயங்களை கொண்டு இப்போராட்டத்தை அரசியல் அடிப்படைவாத போராட்டம் என்று குறிப்பிட முடியும்.
தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் அரசியலமைப்பிற்குட்பட்ட வகையில் தீர்மானங்களை செயற்படுத்தும். ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை முடக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. தேசிய சொத்துக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்காகவே நேற்றுமுன்தினம் இரவு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடைமுறையில் பல தீர்மானங்களை செயற்படுத்தியுள்ளது. நாட்டு மக்களின் போராட்டம் ஜனநாயகத்திற்கு அப்பாற்பட்டதாக அமையும் பட்சத்தில் அது முழு நாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.
No comments:
Post a Comment