நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் பொறுப்பை சபாநாயகர் ஏற்க வேண்டும் : தேர்தலை நடத்தினால் ஒட்டு மொத்த அரசியல்வாதிகளையும் மக்கள் அடித்து விரட்டுவார்கள் - விஜயதாஷ ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 5, 2022

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் பொறுப்பை சபாநாயகர் ஏற்க வேண்டும் : தேர்தலை நடத்தினால் ஒட்டு மொத்த அரசியல்வாதிகளையும் மக்கள் அடித்து விரட்டுவார்கள் - விஜயதாஷ ராஜபக்ஷ

(எம்.ஆர்.எம். வசீம் ,இராஜதுரை ஹஷான்)

நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் பொறுப்பை சபாநாயகர் அரசியலமைப்பு சபையின் தலைவர் என்ற ரீதியில் ஏற்க வேண்டும். பாராளுமன்றம் பொறுப்பற்ற வகையில் இருந்தால் நாட்டில் இரத்த வெள்ளம் பெருக்கெடுக்கும் அளவிற்கு சமூக கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினை தீவிரமடையும். தற்போதைய நிலையில் தேர்தலை நடத்தினால் நாட்டு மக்கள் அரசியல்வாதிகளை அடித்து விரட்டுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஷ ராஜபக்ஷ தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை (5) ஆரம்பமானதை தொடர்ந்து நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் உரையாற்றுகையில ; மேற்கண்டவாறு குறிப்பட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலைக்கு பாராளுமன்றம் சிறந்த தீர்மானத்தை துரிதமாக முன்னெடுக்காவிடின் நாட்டில் இரத்த வெள்ளம் ஓடும் அபாயகரமான சூழல் தோற்றம் பெறும்.

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண சபாநாயகர் பாராளுமன்ற மட்டத்தில் உரிய நடவடிக்கை முன்னெடுக்காவிடின் ஒட்டு மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களையும் எதிர்காலம் சபிக்கும்.

இடைக்கால அரசாங்கம் மற்றும் இடைக்கால பிரதமர் பதவி குறித்து அரசியலமைப்பின் 74ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் குறித்து பாராளுமன்றம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இடைக்கால அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் அமைச்சர்கள் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

பிரதமர் உட்பட முழு அரசாங்கமும் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அரசாங்கம் நாட்டு மக்களுக்கு உண்மையுடன் செயற்பட வேண்டும்.

தற்போதைய நிலையில் தேர்தலை நடத்தினால் நாட்டு மக்கள் ஒட்டு மொத்த அரசியல்வாதிகளையும் அடித்து விரட்டுவார்கள் என்பதே உண்மை.

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணும் பொறுப்பை சபாநாயகர் அரசியமைப்பு சபையின் தலைவர் என்ற ரீதியில் பொறுப்பேற்க வேண்டும். பாராளுமன்றம் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டால் அது பாரிய விளைவினை ஏற்படுத்தும்.

பிரதமர் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தற்போதைய நெருக்கடிக்கு நிலைக்கு தீர்வு காண ஒன்றினைந்து செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment