(நா.தனுஜா)
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியுதவி பெறுவதற்கான நாட்டத்தை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், இவ்விடயம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை வெகுவிரைவில் ஆரம்பிக்கவிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
அதுமாத்திரமன்றி நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வொஷிங்டன் விஜயத்தின்போது இது குறித்துக் கலந்துரையாடப்படும் என்று அந்நிதியத்தின் ஊடாகப் பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.
தமது ஒப்பந்தத்தின் 4 ஆம் சரத்தின் பிரகாரம் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கையுடனான இரு தரப்புக் கலந்துரையாடல்கள் மற்றும் பொருளாதார நிலைவரம் குறித்த மதிப்பீடுகளைக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பித்து, 20 ஆம் திகதி முடிவிற்குக் கொண்டுவந்திருந்தது.
இலங்கை பற்றிய சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவின் முழுமையான மதிப்பீட்டு அறிக்கை கடந்த மாதம் 25 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
கடன் மீள் செலுத்துகையைப் பொறுத்தமட்டில் இலங்கை மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதாகவும், தற்போது இலங்கையின் வசமுள்ள இருப்பு அண்மைய காலங்களில் மீளச் செலுத்த வேண்டியுள்ள கடன்களைச் செலுத்துவதற்குப் போதுமானதல்ல என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே இலங்கை தம்மிடம் நிதியுதவிக்கான கோரிக்கையை முன்வைத்திருக்கும் நிலையில், அது குறித்த பேச்சுவார்த்தைகளை வெகுவிரைவில் ஆரம்பிக்கவிருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
'சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான நாட்டத்தை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது.
எனவே இந்த நிதியுதவி வழங்கல் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் வெகுவிரைவில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவிருப்பதுடன், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இம்மாத வொஷிங்டன் விஜயத்தின்போதும் இது குறித்துக் கலந்துரையாடப்படும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இம்மாதம் அமெரிக்காவின் வொஷிங்டனுக்கு விஜயம் செய்யவிருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில், இவ்விஜயத்தின்போது சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய சர்வதேச நிதிக் கட்டமைப்புக்களின் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இருப்பினும் இது குறித்துத் தெளிவுபடுத்தியிருந்த உலக வங்கி, நிறைபேறான பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை அடையாளங்காண்பதற்காக இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டுவருவதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment