இலங்கைக்கு புதிய பிரதமரா? மைத்திரியின் தகவலுடன் முரண்படும் எம்.பிக்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 30, 2022

இலங்கைக்கு புதிய பிரதமரா? மைத்திரியின் தகவலுடன் முரண்படும் எம்.பிக்கள்

இலங்கையில் தற்போது நீடித்து வரும் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இல்லாத புதிய பிரதமர் ஒருவரின் கீழ் அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பரிசீலித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் என்ற முறையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்துப் பேசினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேசிய இணக்க அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து அனைத்து கட்சிகளுடன் விரைவில் பேசும் கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு விடுப்பார் என்று கூறினார்.

இலங்கையில் மஹிந்த இல்லாத புதிய அமைச்சரவை கொண்ட இடைக்கால அரசு, 15 முதல் 20 அமைச்சர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தமது கட்சியின் யோசனைக்கு அமைய, தேசிய சபையை அமைக்கவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்ததாக மைத்திரிபால சிறிசேன கூறுகிறார்.

தேசிய இணக்க அரசாங்கம்
இதேவேளை, தேசிய இணக்க அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயல்படும் கட்சிகளுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று விசேட கலந்துரையாடலொன்றை நடத்தினார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது தேசிய இணக்க அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து யோசனை முன்மொழியப்பட்டது. அதற்கு சாதகமான நிலைப்பாட்டை ஜனாதிபதி கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர கூறுகிறார்.

தேசிய இணக்க அரசாங்கத்துடன் இணைந்து செயல்படும் கட்சிகளின் பிரதிநிதிகள் இடம்பெற்ற தேசிய சபை அமைக்கப்பட்டு, அதன் மூலம் பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்க தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து விரிவாகப் பேசிய அவர், ''ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய எமது கட்சிகளின் இணக்கத்துடன் தேசிய இணக்க அரசாங்கம் என பெயரிட நாம் தீர்மானித்துள்ளோம்.

ஜனாதிபதியின் தலைமைத்துவத்தில் தேசிய இணக்க அரசாங்கத்துடன் இணையும் அனைத்து கட்சித் தலைவர்களுடனான தேசிய சபையொன்று உருவாக்கப்படும். அந்த தேசிய சபையின் ஊடாகவே, தேசிய இணக்க அரசாங்கத்தின் பிரதமர் யார் என்பது தீர்மானிக்கப்படும்.

நாடு இந்த பிரச்சினையிலிருந்து மீள்வதற்கும், மக்களின் நன்மதிப்பை வென்றெடுப்பதற்கும் அமைச்சு பொறுப்புக்கள் எத்தனை வேண்டும் என்பதை அந்த தேசிய சபையே தீர்மானிக்கும். அத்துடன், அமைச்சுப் பொறுப்புக்களை யார் யார் வகிக்க வேண்டும் என்பதும் அந்த தேசிய சபையே தீர்மானிக்கும்.

அதேபோன்று, இராஜாங்க அமைச்சுப் பொறுப்புக்கள் எத்தனை வேண்டும் என்பதையும் அந்த தேசிய சபையே தீர்மானிக்கும். அந்த இராஜாங்க அமைச்சர்கள் யார் என்பதையும் அந்த தேசிய சபையே தீர்மானிக்கும்.

அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்களையும் அந்த தேசிய சபையே தீர்மானிக்கும். இன்றைய தினம் மிகவும் வெற்றிகரமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது" என்கிறார்.

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும், தாம் பதவி விலகப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபயவும் பிரதமர் மஹிந்தவும் தொடர்ச்சியாக கூறுகின்றனர். இத்தகைய சூழலில் ஒவ்வொரு கட்சிகளின் தலைவர்களையும் ஜனாதிபதி கோட்டாபய சந்தித்துப் பேசி வருவது இலங்கை அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது.

முரண்படும் தகவல்
இதற்கிடையே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலக்குவது குறித்து எந்தவித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சர்வ கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்தே நேற்றையதினம் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தி, இந்த திட்டத்திற்கு அவர்களையும் இணைத்துக் கொள்ளும் முயற்சிகளை எடுப்பதற்கு இணக்கம் எட்டப்பட்டதாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

பிபிசி

No comments:

Post a Comment