(இராஜதுரை ஹஷான்)
பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலைக்கு அரச தலைவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்தின் தோல்வி மக்களின் போராட்டமாக வெளிப்படுகிறது. பொதுமக்கள் தமக்கான அரசாங்கத்தை ஸ்தாபிக்க வாய்ப்பளிக்க வேண்டும். நாட்டு மக்களை பலியிட்டு கடனை செலுத்தும் கொள்கையை அரசாங்கம் கைவிட வேண்டும் என முன்னாள் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் வெள்ளிக்கிழமை (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் 5 வருட கால பதவியின் இலட்சினம் ஒன்றரை வருட காலத்திற்குள் வெளிப்பட்டு விட்டது. கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நாட்டு மக்களின் அத்தியாவசிய தேவை மற்றும் சேவைத்துறையில் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்தினோம்.
பொருளாதாரம் தொடர்பிலான சிறந்த ஆலோசனைகளுக்கு நிதியமைச்சர் கவனம் செலுத்தாததன் விளைவை இன்று நாட்டு மக்கள் வரிசையில் நின்று அனுபவிக்கிறார்கள். பொருளாதார நெருக்கடியின் காரணமாக கடன் செலுத்தலை மறுசீரமைக்குமாறு அரசாங்கம் சர்வதேசத்திடம் வலியுறுத்தியிருந்தால் நிச்சயம் சர்வதேசம் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கும்.
இவ்வருடத்தில் மாத்திரம் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை அரசமுறை கடனாக மீள செலுத்த வேண்டும். அரச வருமானம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருள் மற்றும் இறக்குமதி சேவையை மட்டுப்படுத்தி அந்த தொகையினை கடனாக செலுத்த வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பொருட்கள் இறக்குமதி மட்டுப்படுத்தப்படும் போது நடுத்தர மக்கள் பாரிய நெருக்கடியினை எதிர்கொள்வார்கள் என்பதை தற்போதைய நிலவரத்தின் ஊடாக நன்கு விளங்கிக் கொள்ள முடிகிறது. நாட்டு மக்களை பலியிட்டு கடனை மீள் செலுத்தும் கொள்கையை அரசாங்கம் முதலில் கைவிட வேண்டும்.
பொதுமக்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாத நெருக்கடி நிலைக்கு அரச தலைவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்தின் தோல்வி மக்களின் போராட்டமாக வெளிப்படுகிறது. நாட்டு மக்கள் தமக்காக அரசாங்கத்தை தெரிவு செய்ய அரசாங்கம் வாய்ப்பளிக்க வேண்டும். பொதுத் தேர்தல் இடம்பெறும் வரை இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment