(எம்.மனோசித்ரா)
மாத்தளை - நாவுல பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியைப் பறித்த சந்தேகநபரொருவர், எதிர்பாராதவிதமாக குறித்த துப்பாக்கி இயங்கியதில் உயிரிழந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் புதன்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாவுல பொலிஸ் பிரிவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மற்றும் போதைப் பொருட்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில் சுற்றிவளைப்புக்களில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இரகசிய தகவலொன்று கிடைக்கப் பெற்றுள்ளது.
அதற்கமைய எலஹெர வீதி, 2 ஆம் தூணுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த நபரொருவரிடமிருந்து ஹெரோயின் என்று சந்தேகிக்கப்படுகின்ற வெவ்வேறு அளவுகளிலான 11 பக்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைப்பற்றப்பட்ட பக்கட்டுக்களை பரிசோதித்துக் கொண்டிருந்த போது, சந்தேகநபர்களால் இரு பொலிஸாரில் ஒருவரின் துப்பாக்கி பறிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இருவருக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதோடு, மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேகநபரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்துள்ளார். இதன்போது குறித்த சந்தேகநபர் பொலிஸாரிடமிருந்து மீண்டும் துப்பாக்கியை பறிக்க முயற்சித்த போது துப்பாக்கி இயங்கியுள்ளது.
இதனால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சந்தேகநபர் நாலந்தா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 39 வயதுடைய நாவுல - எஹெலஹெர வீதி பகுதியைச் சேர்ந்தவராவார்.
இவ்வாறு உயிரிழிந்தவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி நபரொருவரை தாக்கி கழுத்தை நெறித்து கொலை செய்தமை தொடர்பில் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வழக்கு விசாரணையின் பிரதான சந்தேகநபர் என்பதோடு, தம்புள்ளை பிரதேசத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர் மீது தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தினால் போதைப் பொருளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு எண் 79719 இன் கீழ் 20 மில்லி கிராம் ஹெரோயினை வைத்திருந்தமைக்காக வழக்கு தொடரப்பட்டு 10,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று வழக்கு எண் 91802 இன் கீழ் 570 மில்லி கிராம் ஹெரோயினை வைத்திருந்தமை தொடர்பில் வழக்கு தொடரப்பட்டு 10,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கு எண் 95083 இன் கீழ் 350 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்தமை தொடர்பில் வழக்கு தொடரப்பட்டு 10,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கு எண் 5292 இன் கீழ் 1212 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்தமை தொடர்பில் வழக்கு தொடரப்பட்டு 10,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டு, 3 மாத கால சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாவுல நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு , நாவுல பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment