விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரை ஜனாதிபதி பதவி நீக்கியமை மக்களாணைக்கு முரணான செயற்பாடாகும். அமைச்சுப் பதவியை துறக்கப் போவதில்லை. அரசாங்கம் தவறை திருத்திக் கொள்ளும் வரை அமைச்சின் விடயங்களிலும், அமைச்சரவை கூட்டத்திலும் கலந்துகொள்ளப் போவதில்லை என நீர் வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்து வெள்ளிக்கிழமை (4) கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு பாரிய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண அமைச்சரவையில் வாய்ப்பு வழங்காத காரணத்தினால் பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்து 'முழு நாடும் சரியான பாதைக்கு' என்ற தேசிய கொள்கைத் திட்டத்தை வெளிப்படுத்தினோம்.
கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளில் பெரும்பாலானோர் மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்கள். ஆகவே மக்கள் மத்தியில் உண்மையை குறிப்பிட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பு அவர்களுக்கு உண்டு.
பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்காக பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்து முன்வைத்த யோசனைகளை செயற்படுத்துவதை விடுத்து உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோரை ஜனாதிபதி பதவி நீக்கியமை மக்களாணைக்கு முரணான செயற்படாகும்.
ஜனாதிபதி செய்த தவறை திருத்திக் கொண்டு, பங்காளி கட்சிகள் முன்வைத்த யோசனைகளை செயற்படுத்த வேண்டும். நாம் மூவரும் ஒன்றிணைந்தே செயற்பட்டோம்.
அமைச்சுப் பதவியில் இருந்து நான் விலகப் போவதுமில்லை, அமைச்சின் நடவக்கைகளிலும், அமைச்சரவைக் கூட்டத்திலும் கலந்து கொள்ளப் போவதில்லை.
சிறந்த நோக்கத்திற்காக அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினோம். இடைப்பட்ட காலத்தில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. அரசாங்கத்துடன் முரண்பட்டுக் கொண்டதால் எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணையப் போவதில்லை.
நாடு பாரிய நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு.
மக்களின் எண்ணப்பாட்டை கருத்திற் கொண்டே அரசாங்கத்தின் குறைபாட்டை விமர்சித்தோம். நாட்டை பாதுகாக்கும் எமது போராட்டத்திற்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்றார்.
No comments:
Post a Comment