ஜனாதிபதி கோட்டாபாய தனது இயலாமையை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தியுள்ளார் - இம்ரான் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 30, 2022

ஜனாதிபதி கோட்டாபாய தனது இயலாமையை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தியுள்ளார் - இம்ரான் எம்.பி

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ பொருளாதார ரீதியில் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாத தனது இயலாமையை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தியுள்ளார் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உலகளவில் ஏற்பட்ட கொரோனா தொற்றுக் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது போனதாக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ கொழும்பில் நடைபெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த மாநாட்டுக்காக உரையாற்றிய பங்களாதேஸ் பிரதமர் பேகம் ஷேக் ஹஸீனா கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் தமது நாடு 6.3 வீதம் பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையும் பங்களாதேசும் தெற்காசிய நாடுகள். இரண்டு நாட்டுக்கும் கொரோனா பொதுப் பிரச்சினை. இருந்தும் அந்த நாடு பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளது. நமது பொருளாதாரம் அதளபாதாளத்தை நோக்கிப் போயுள்ளது. 

இந்தக் கொரோனா சவாலுக்கு மத்தியில் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வது தொடர்பாக தனது முழு ஆற்றலையும் பங்களாதேஸ் பயன் படுத்தியது. அது வெற்றி கண்டது.

நமது நாட்டில் நடந்ததென்ன? ஜனாதிபதி போலி விளம்பரங்கள் மூலம் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்தார். எனினும் அவரால் கொரோனா சவாலை வெற்றி கொண்டு பொருளாதாரத்தை முன்னேற்ற முடியவில்லை. 

தேர்தலில் போலி விளம்பரம் செய்து மக்களைக் கவரும் ஆற்றல் பெற்ற அவருக்கு நாட்டின் பொருளாதாரம் பற்றித் தெரியாது. இதனால் நாட்டின் பொருளாதாரம் குட்டிச் சுவராகிவிட்டது.

எரிபொருளுக்கு வரிசை. எரிவாயுவுக்கு வரிசை. பால்மா இல்லை. சகல பொருட்களினதும் விலை பல மடங்கு அதிகரிப்பு. தினமும் 9 மணித்தியாலங்களுக்கு மாத்திரமே மின்சாரம் வழங்குவோம் என்று வெட்கமில்லாமல் அறிவித்து செயற்படுத்தும் சூழ்நிலை. மக்கள் தொடர்ந்து பட்டினியை நோக்கிச் செல்லும் பரிதாபம். பொருளாதாரம் தெரியாதோரிடம் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்ததன் விளைவுகள் இவை.

ஆடத்தெரியாதவன் மேடையைக் குறை சொல்வதைப் போல பொருளாதாரம் தெரியாத ஜனாதிபதி அதற்கு கொரோனாவைக் காரணம் காட்டுகின்றார். இதனால் அவர் தோல்வியடைந்ததோடு மட்டுமல்லாது நாட்டு மக்களையும் பொருளாதாரத்தில் தோல்வியடையச் செய்துள்ளார்.

யார் யாருக்கு என்ன ஆற்றல் உள்ளது என்பதைப் பார்க்காமல் எல்லாவற்றையும் அவர் அரசியல் ரீதியாகப் பார்த்ததே இதற்குக் காரணம். நமது நாட்டில் பொருளாதாரம் தெரியாத நிதியமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சொல்வதற்கு தலையசைக்கும் அதிகாரிகள் சிலர் அந்த அமைச்சின் கீழ் உள்ளனர்.

நாட்டின் பொருளாதார முன்னேற்றம் குறித்த அக்கறையற்ற மத்திய வங்கி ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கி ஆளுநருக்கு தெரிந்த ஒரேயொரு பொருளாதார அறிவு தட்டுப்பாடு ஏற்பட்டால் காசு அச்சடிக்கும் பொறிமுறை மட்டும்தான்.

இந்த நிலையில் நாடு எப்படி முன்னேறும் என்று கேட்க விரும்புகின்றேன். எனவே, தனது இயலாமையை பகிரங்கமாக ஒத்துக் கொண்ட ஜனாதிபதி தன்னால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாவிட்டால் விட்டு ஒதுங்கிச் செல்வது அவர் இந்த நாட்டுக்குச் செய்யும் பேருதவியாகும். இதன் மூலம் வரலாறு அவரைப் பேசும்.

இந்த நிலையில் சரியானவர்களை இனங்காணும் அறிவு குறைந்த எம்மில் சிலர் பாராளுமன்றத்தில் அவர்கள் சமர்ப்பிக்கும் எல்லாவற்றிற்கும் கையை உயர்த்தி இந்த நாடு பொருளாதாரத்தில் குட்டிச் சுவராக காரணமாக அமைந்து விட்டார்கள். அவர்களும் இந்த நாட்டின் பொருளாதார பின்னடைவுக்கு காரணமாக அமைந்தவர்கள் என்று வரலாறு பேசும் என்பதை நினைக்கும் போது கவலையாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment