(எம்.மனோசித்ரா)
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலிலிருந்து டீசல் தொகையை பெற்றுக் கொள்வதற்காக 31 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக வலு சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனூடாக 37300 மெட்ரிக் தொன் டீசல் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், குறித்த கப்பலிலுள்ள டீசலை இறக்கும் பணிகள் வெகு விரைவில் முன்னெடுக்கப்படும் என்று வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த பெப்ரவரி 23 ஆம் திகதி 37500 மெட்ரிக் தொன் டீசலைப் பெற்றுக் கொள்வதற்காக சிங்கப்பூர் கப்பல் நிறுவனத்திற்கு 35.3 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டது.
எரிபொருளை தடையின்றி விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
அடிக்கடி இவ்வாறு டொலரை செலுத்தி அவ்வப்போது எரிபொருள் பெற்றுக் கொள்ளப்பட்டாலும், நாட்டில் கடந்த ஓரிரு வாரங்களாக நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.
வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில செவ்வாயன்று எதிர்வரும் 4 நாட்களுக்கு மாத்திரமே போதுமான எரிபொருள் காணப்படுவதாகவும், எரிபொருள் விநியோகத்தை நாளாந்தம் 3000 மெட்ரிக் தொன் என்றவாறு மட்டுப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில் ஐ.ஓ.சி. நிறுவனம் கடந்த மாதத்தில் மாத்திரம் இரு சந்தர்ப்பங்களில் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தது.
முழு உலகும் அதிர்ந்து போயுள்ள ரஷ்ய - உக்ரைன் மோதலால் உலக சந்தையில் எதிர்வரும் இரு வாரங்களுக்கும் மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் விலை 120 டொலர் வரை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன் தாக்கம் ஏனைய நாடுகளைப் போலவே இலங்கையையும் பாதிக்கும் என்று அரசாங்கமும் ஏற்றுக் கொண்டுள்ளது. அத்தோடு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் ஏற்படக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதுவரையில் எரிபொருள் விலையை அதிகரிக்கவில்லை. எனினும் ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்தமையைத் தொடர்ந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் விலையை அதிகரிப்பதற்கான கோரிக்கையை தொடர்ந்தும் முன்வைத்து வந்தது. எவ்வாறிருப்பினும் நிதி அமைச்சினால் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு ஒரு மாதம் கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் 'எரிபொருள் இல்லை' என்று அறிவித்தல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதனால் எரிபொருள் பாவனையாளர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். டீசல் மற்றும் பெற்றோல் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக மக்களும் வாகனங்களும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நாளாந்தம் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment