வான் வெளியை பயன்படுத்த தடை : உக்ரைன் எண்ணெய் கிடங்கு மீது ஏவுகணை தாக்குதல் : கார் மீது ஏறிய ராணுவ டாங்கி : கார்கீவ்வுக்குள் நுழைந்த ரஷ்ய படை - News View

About Us

About Us

Breaking

Sunday, February 27, 2022

வான் வெளியை பயன்படுத்த தடை : உக்ரைன் எண்ணெய் கிடங்கு மீது ஏவுகணை தாக்குதல் : கார் மீது ஏறிய ராணுவ டாங்கி : கார்கீவ்வுக்குள் நுழைந்த ரஷ்ய படை

வான் வெளியை பயன்படுத்த தடை
உக்ரைன் மீதான படையெடுப்பால் ஐரோப்பிய நாடுகளுடனான ரஷ்ய உறவு பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

ரஷ்யாவுக்கு எதிராக போரிடும் வகையில் உக்ரைனுக்கு, நட்பு நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. மேலும் லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகள், ரஷ்ய விமானங்கள் தங்கள் வான் வெளியை பயன்படுத்த தடை விதித்துள்ளன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கும் வகையில் ரஷ்யா தனது வான் வெளியை மூடியதாக அந்நாட்டு அரசு விமானப் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.

முன்னதாக நேற்று ருமேனியா, பல்கேரியா, போலந்து மற்றும் செக் குடியரசு விமானங்கள் தனது வான் வெளியில் பறப்பதற்கு ரஷ்யா அனுமதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஷ்ய விமானங்கள் தனது வான் வெளியை பயன்படுத்த தடை விதிக்கும் நடவடிக்கைகளை ஜெர்மனி அரசு மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் வோல்கர் விஸ்சிங், ரஷ்ய விமானங்களுக்கு தடை விதித்து ஜெர்மனி வான் வெளியை மூடும் நடவடிக்கையை ஆதரிப்பதோடு, அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

எண்ணெய் கிடங்கு மீது ஏவுகணை தாக்குதல்
ரஷ்ய ஏவுகணைகள், உக்ரைன் தலைநகர் கீயவ் அருகிலுள்ள வாசில்கிவில் உள்ள எண்ணெய்க் கிடங்கைத் தாக்கியதாக அந்த பகுதி மேயர் கூறியுள்ளார். இதனால் நச்சுப் புகை வெளியேறும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 4 வது நாளாக இன்றும் தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்யா படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் ராணுவமும் தங்களை தற்காத்துக் கொள்ள ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள இரண்டாவது பெரிய நகரமான வாசில்கிவில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் எண்ணெய் கிடங்கு ஒன்று தீப்பற்றி எரிந்தது என உக்ரைன் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்..

தலைநகரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள வாசில்கிவில் எண்ணெய் கிடங்கு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அது வெடித்த காரணத்தால் காற்றில் புகை மற்றும் நச்சுப் பொருள்கள் பரவக்கூடும்.

எனவே மக்கள் தங்கள் ஜன்னல்களை இறுக்கமாக மூடிவைத்திருக்க வேண்டும் என்று கியவ் நகர நிர்வாகத்தை மேற்கோள் காட்டி தி கீயவ் இன்டிபெண்டன்ட் பத்திரிகை ட்வீட் செய்துள்ளது.

இந்த தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோவில் அதிக அளவிலான புகை காற்றில் பரவுவது தெரிகிறது.

கார் மீது ஏறியரஷ்ய ராணுவ டாங்கி
உக்ரைனின் ஒபலோனுக்குள் புகுந்த ரஷ்ய ராணுவ டாங்கி ஒன்று வீதியில் சென்ற கார் மீது ஏறி இறங்கும் காட்சி ஒன்று வெளியாகி உள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்ற தலைநகர் கிவ் நோக்கி ராணுவத்தின் டாங்கிகள் நகர்ந்து வருகிறது. அவை விளை நிலங்கள் வழியாக செல்வதால் பயிர்கள் அனைத்தும் நாசமாகி விட்டதாக உக்ரைன் மக்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே ரஷ்ய போர் விமானங்கள் வீசிய ரொக்கெட் குண்டுகளால் பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி விட்டது.

இதற்கிடையே உக்ரைனின் ஒபலோனின் நகர் பகுதிக்குள் நுழைந்த ராணுவ டாங்கிகள் அங்கிருந்த வீதிகள் வழியாக அரசு கட்டிடங்களை கைப்பற்றி வருகிறது. இதற்காக புறப்பட்ட டாங்கிகள் வீதியில் செல்லும் பொதுமக்களின் வாகனங்களையும் மோதி தள்ளுவதாக புகார் எழுந்தது.

இதனை உறுதிப்படுத்துவது போல உக்ரைனின் ஒபலோனுக்குள் புகுந்த ரஷ்ய ராணுவ டாங்கி ஒன்று வீதியில் சென்ற கார் மீது ஏறி இறங்கும் காட்சி ஒன்று வெளியாகி உள்ளது.

ரஷ்ய ராணுவ டாங்கி, காரை மோதி தள்ளி சுக்குநூறாக உடைக்கும் காட்சிகளை அல் ஜசீரா என்ற அமைப்பு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது.

இந்த வீடியோ சில மணி நேரத்தில் வைரலாகி உலகம் முழுவதும் பரவியது. இந்த காட்சியை பார்த்த சர்வதேச அமைப்புகள் இதற்கு பலத்த கண்டனம் தெரிவித்தனர். ரஷ்யாவின் செயலுக்கு கண்டனமும் தெரிவித்தனர்.

உக்ரைன் நகரமான கார்கீவ்வுக்குள் நுழைந்த ரஷ்ய படை
கார்கீவ் பிராந்திய நிர்வாகத்தின் தலைவர் ஒலெக் சினெகுபோவ், இலகுரக ராணுவ வாகனங்கள் "நகருக்குள் நுழைந்துவிட்டன" என்று கூறியுள்ளார்.

ரஷ்ய படை வண்டிகள் உக்ரைன்  நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான கார்கீவுக்குள் அணிவகுத்து செல்வதை போன்ற வீடியோ காட்சி டெலிகிராம் செயலி மூலம் பகிரப்பட்டுள்ளது. 

நகர மையத்தில் ரஷ்ய படைகள் இருப்பதாகக் கூறி, குடியிருப்பாளர்களை தங்கள் வீட்டுக்கு உள்ளே இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

"தங்கள் குடியிருப்பை விட்டு வெளியேறாதீர்கள். உக்ரைன் ஆயுதப் படைகள் எதிரிகளை எதிர்கொண்டு வருகின்றன. பொதுமக்கள் தெருக்களில்‌ நடமாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment