“நாட்டுக்குள் ஏற்படவிருந்த பெரும் அழிவு நிலைமையை தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்த முடிந்தது” : ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Saturday, February 26, 2022

“நாட்டுக்குள் ஏற்படவிருந்த பெரும் அழிவு நிலைமையை தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்த முடிந்தது” : ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

நாட்டுக்குள் ஏற்படவிருந்த பெரும் அழிவு நிலைமையை, கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் மூலமே கட்டுப்படுத்த முடிந்ததென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தை மையப்படுத்தி, நேற்றையதினம் (25) வீடியோ தொழில்நுட்பத்தில் இடம்பெற்ற உலகளாவிய தடுப்பூசி ஏற்றலை விரைவுபடுத்துவதற்கான உயர்மட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியில் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் சமத்துவமின்மை மற்றும் ஆபத்துமிக்க புதிய திரிபுகள் ஏற்படுவதற்குள்ள நிகழ்தகவு போன்றவற்றைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைத்து இடங்களிலுமுள்ள அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதே, இந்தத் தொற்றுப் பரவலில் இருந்து மீள்வதற்குள்ள ஒரே வழியென்றும் அரச தலைவர்கள் முன்னிலையில் எடுத்துரைத்தார்.

இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் அப்துல்லா ஷாஹிட் (Abdulla Shahid) மற்றும் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் (Antonio Guterres) ஆகியோர், கொவிட் தடுப்பூசி ஏற்றலிலுள்ள முக்கியத்துவம் மற்றும் இது விடயத்தில் பல்வேறு நாடுகள் செயற்பட்ட விதம் தொடர்பில் குறிப்பிட்டனர்.

இந்த விவாதத்தின் முதல் சுற்றின் போது, தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்தில் எதிர்கொள்ளப்படும் சவால்கள், தரம், குறைந்தளவு தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்த நாடுகளுக்கு அதிகளவில் விநியோகித்தல், விநியோக விகிதத்தை மேம்படுத்துதல் மற்றும் விநியோக முன்னறிவிப்பை உறுதி செய்தல் போன்ற விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.

விவாதத்தின் இரண்டாம் சுற்றின் போது, தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்குத் தேவையான புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தீர்வுகளைக் கண்டறிவதோடு, உலகளாவிய தடுப்பூசி ஏற்றலை விரைவுபடுத்துவதற்கும் எதிர்பார்க்கப்பட்டது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம், மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம், தடுப்பூசிக் கூட்டமைப்பான “கவி” (GAVI)இன் நிறைவேற்று அதிகாரி டொக்டர் செத் பர்க்லி மற்றும் அரச தலைவர்களும் இதன்போது உரை நிகழ்த்தினர்.

ஜனாதிபதி, வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக நிகழ்த்திய முழுமையான உரை

தலைவர் அவர்களே,
அரச தலைவர்களே,
உறுப்பினர்களே,

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் அதிமேதகு (Abdulla Shahid) அப்துல்லா ஷாஹிட் அவர்கள் தலைமையில் இந்த விவாதத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளமைக்கு, இலங்கை சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கொவிட்-19 தொற்றுப் பரவலானது, அனைத்து நாடுகளுக்கும் பாரிய பிரச்சினையாக அமைந்துள்ளது.

உலகளாவிய ரீதியில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் சமத்துவமின்மையானது, ஆபத்துமிக்க புதிய திரிபுகள் ஏற்படுவதற்குள்ள வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.

கடந்தாண்டு பொதுச் சபைக் கூட்டத்தின் போது நான் உரையாற்றியவாறு, அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதை உறுதிப்படுத்துதே, தொற்றுப் பரவலில் இருந்து மீள்வதற்குள்ள சிறந்த வழியாகும்.

இலங்கையில் 2021 ஜனவரி மாதத்திலேயே தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதாவது, முதன்முறையாகத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்த உடனேயே இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அது, கொவிட் தொற்றால் ஏற்படக்கூடிய மரணங்களைத் தடுத்தல், நோய் நிலைமையைக் குறைத்தல் மற்றும் தொற்றுப் பரவலைக் குறைத்தல் போன்று பொதுப் பாதுகாப்பு இலக்குகளைப் பாதுகாத்துக்கொண்டு, சமூக மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளைப் பராமரிப்பதற்கான கொள்கைகளின் மீது எடுக்கப்பட்ட ஒரு படிமுறையாக விளங்கியது.

சுகாதார ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் பெரியவர்கள் என்ற முன்னுரிமை அடிப்படையிலேயே நாம் எமது தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தோம். இது, ஆபத்து அடிப்படையிலான அணுகுமுறையின் கீழ் பின்பற்றப்பட்டது.

2022 ஜனவரி மாதத்துக்குள், 12 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பிரஜைகளும் கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம். இதனால், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு இருந்த ஆர்வத்தை, நாடு முழுவதிலும் காணக்கிடைத்தது.

இவ்வாண்டு பெப்ரவரி 15ஆம் திகதி வரையில், தடுப்பூசி பெற்றுக்கொள்ளக்கூடிய மொத்தச் சனத்தொகையில் 95 சதவீதமானோர் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், 80 சதவீதமானோர் முழுமையான தடுப்பூசி ஏற்றலுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இந்த முழுமையான தடுப்பூசி ஏற்றலுக்கு உள்வாங்கப்பட்டவர்களில் 44 சதவீதமானோர், பூஸ்டர் தடுப்பூசியையும் (மூன்றாவது டோஸ்) பெற்றுக்கொண்டுள்ளனர்.

இவ்வாறான நடைமுறைகளைப் பின்பற்றியதால், தொற்றுப் பரவல் காரணமாக நாட்டுக்கு ஏற்படவிருந்த பாரிய அழிவு நிலைமையைக் கட்டுப்படுத்த முடிந்தது.

நேரடியாகவோ அல்லது COVAX திட்டத்தின் ஊடாகவோ தடுப்பூசிகளை வழங்கிய நாடுகளின் பெருந்தன்மைக்கு இலங்கை தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது. இதனூடாக, தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிகளவில் தடுப்பூசிகளைப் பெற்று, நாட்டுக்குத் தேவையான முழுமையான தடுப்பூசி ஏற்றலை முன்னெடுக்க வாய்ப்பு கிடைத்தது.

மனித குலத்தின் நன்மைக்காக, ஒட்டுமொத்த தடுப்பூசி ஏற்றலைத் துரிதப்படுத்த, அனைவரும் ஒன்றிணைந்துச் செயற்பட வேண்டுமென, அனைத்து நாடுகளிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment