இஷான் கிஷான், தினேஷ் சந்திமால் வைத்தியசாலையில் அனுமதி : இலங்கைக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் இந்தியா வெற்றி - News View

About Us

About Us

Breaking

Sunday, February 27, 2022

இஷான் கிஷான், தினேஷ் சந்திமால் வைத்தியசாலையில் அனுமதி : இலங்கைக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் இந்தியா வெற்றி

தர்மசாலாவில் நேற்றிரவு நடந்த இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி:20 போட்டியின் போது தலையில் காயம் அடைந்த இந்திய இளம் விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான இஷான் கிஷன் ஹிமாச்சல பிரதேசத்தின் காங்க்ராவில் அமைந்துள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி நிர்ணயித்த இலக்கினை இந்தியா துரத்தியாடியபோது, நான்காவது ஓவரில் லஹிரு குமாரவின் ஒரு குறுகிய பந்து நேராக இஷானின் தலைக்கவசத்தை தாக்கியது. இதனால் அவர் உடனடியாக நிலை குலைந்து கீழே வீழ்ந்தார்.

முதலுதவியின் பின்னர், சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் தொடர்ந்து பேட்டிங் செய்தார். எனினும் 16 ஓட்டங்களுடன் லஹிரு குமாரவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் குழுவில் இணைக்கப்பட்டுள்ள வைத்தியர் ஒருவர், இஷான் கிஷான் தலையில் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு CT ஸ்கேன் நடத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளதை உறுதிபடுத்தியுள்ளார்.

இஷான் கிஷானைத் தவிர, இலங்கை அணி வீரர் தினேஷ் சந்திமாலும் நேற்றைய போட்டியின்போது, களத்தடுப்பில் ஈடுபடும் போது, கட்டை விரலில் காயம் ஏற்பட்டதால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதனிடையே இலங்கைக்கு எதிரான நேற்றைய இரண்டாவது டி:20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் மற்றும் 17 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட டி:20 கிரிக்கெட் தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை குவித்தது.

அணி சார்பில் அதிகபடியாக பத்தும் நிஸ்ஸங்க 75 (53) ஓட்டங்களையும், அணித் தலைவர் தசுன் ஷானக்க 47 (19) ஓட்டங்களையும், தனுஷ்க குணதிலக்க 38 (29) ஓட்டங்களையும் பெற்றனர்.

184 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 17.1 ஆவது ஓவரில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 186 ஓட்டங்களை பெற்றி வெற்றியிலக்கை கடந்தது.

அணி சார்பில் அதிகபடியாக ஸ்ரேஸ் அய்யர் 74 (44) ஓட்டங்களையும், சஞ்சு சாம்சன் 39 (25) ஓட்டங்களையும், ஜடேஜா 45 (18) ஓட்டங்களையும் பெற்றனர்.

மூன்றாவதும் இறுதியுமான டி:20 போட்டி இன்றிரவு 7.00 மணிக்கு தர்மசாலாவில் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment