நாட்டின் வசமிருந்த தங்கத்தின் கையிருப்பில் அரைவாசிக்கும் அதிகமான தங்கம் மத்திய வங்கியினால் விற்பனை : பொருளாதாரம் என்ற விமானத்தை தரையிறக்கி பயணிகளைக் காப்பாற்றுவதா? கற்பாறையுடன் மோத விடுவதா? - ஹர்ஷ டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Sunday, January 9, 2022

நாட்டின் வசமிருந்த தங்கத்தின் கையிருப்பில் அரைவாசிக்கும் அதிகமான தங்கம் மத்திய வங்கியினால் விற்பனை : பொருளாதாரம் என்ற விமானத்தை தரையிறக்கி பயணிகளைக் காப்பாற்றுவதா? கற்பாறையுடன் மோத விடுவதா? - ஹர்ஷ டி சில்வா

(நா.தனுஜா)

நாட்டின் வசமிருந்த தங்கத்தின் கையிருப்பில் அரைவாசிக்கும் அதிகமான தங்கம் மத்திய வங்கியினால் விற்பனை செய்யப்பட்டுள்ளமை பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் பொருளியல் நிபுணருமான ஹர்ஷ டி சில்வா, விபத்திற்குள்ளாகியிருக்கும் பொருளாதாரம் என்ற விமானத்தை சுமுகமாகத் தரையிறக்கி பயணிகளைக் காப்பாற்றுவதா? அல்லது அவ்விமானத்தைக் கற்பாறையுடன் மோதுவதற்கு அனுமதிப்பதா? என்பதே தற்போதுள்ள கேள்வியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியினால் கடந்த ஆண்டின் இறுதியில் காணப்பட்ட உத்தியோகபூர்வ இருப்பு தொடர்பான தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அத்தரவுகளின்படி கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 382.2 மில்லியன் டொலர்களாகக் காணப்பட்ட தங்கத்தின் இருப்பு, டிசம்பர் மாதம் 206.8 மில்லியன் டொலர்களால் வீழ்ச்சியடைந்து, 175.4 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த நவம்பரில் 382.2 மில்லியன் டொலர்களாகக் காணப்பட்ட தங்கத்தை முழுதாகவோ அல்லது பகுதியளவிலோ விற்பனை செய்வதற்கு மத்திய வங்கி திட்டமிட்டிருக்கின்றதா? என்று ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தற்போது மத்திய வங்கியினால் புதிய தரவுகள் வெளியிடப்பட்டமையினைத் தொடர்ந்து மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

'நான் ஏற்கனவே கூறியது சரியான விடயமாகும். நாட்டின் வசமிருந்த தங்கத்தின் கையிருப்பில் அரைவாசிக்கும் அதிகமான தங்கம் மத்திய வங்கியினால் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றது. 382 மில்லியன் டொலர்களாகக் காணப்பட்ட தங்கத்தின் இருப்பு தற்போது 175.4 மில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடைந்திருக்கின்றது.

அதேவேளை பரஸ்பர பரிமாற்றல் வசதி அடிப்படையில் சீனாவிடமிருந்து பெறப்பட்ட 10 பில்லியன் யுவான்களை (1.5 பில்லியன் அமெரிக்க டொலர்) கடன்களை மீளச் செலுத்துவதற்குப் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து மத்திய வங்கி தெளிவுபடுத்தவில்லை' என்று ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

'இந்த விமானம் விபத்திற்குள்ளாகிவிட்டது. தற்போது இவ்விமானத்தை கடலை அண்மித்த பகுதியில் மிகவும் சுமுகமாகத் தரையிறக்கி, பயணிகளைக் காப்பாற்றப் போகின்றோமா? அல்லது மிகவும் மோசமான தரையிறக்கத்தினால் இந்த விமானம் கற்பாறையில் மோதுவதற்கு அனுமதிக்கப் போகின்றோமா? என்பதே இப்போது எம்மத்தியில் இருக்கின்ற ஒரே கேள்வியாகும்' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை ஒட்டு மொத்த நாடும் உணவின்றி திண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டாலும், மத்திய வங்கி எதிர்வரும் 18 ஆம் திகதி பிணைமுறிகளுக்கான 500 மில்லியன் டொலர் கொடுப்பனவை மீளச் செலுத்தவிருக்கின்றது. ஏனெனில் சிலர் தமக்கு பெருந்தொகையான இலாபம் கிடைக்கக் கூடிய வகையில் உயர் கழிவிற்கு இந்த பிணைமுறிகளைக் கொள்வனவு செய்திருக்கின்றார்கள்.

ஆகவே இந்த பிணைமுறிகளின் பயனாளிகள் யார் என்பதை மத்திய வங்கி வெளிப்படுத்த வேண்டும். இக்கொடுப்பனவு செலுத்தப்பட்டவுடன் அதன் பயனாளிகள் தொடர்பான விபரங்களும் முழுமையாக கணக்காய்வு அறிக்கைகளும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment