(எம்.மனோசித்ரா)
நாட்டில் தற்போது காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கும் வகையிலான தேசிய வேலைத்திட்டமொன்றை முன்வைக்கவுள்ளோம். அந்த வேலைத்திட்டத்தினை ஏற்றுக் கொள்பவர்களுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி சிறந்த எதிர்காலத்தை தோற்றுவிப்போம் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் நாம் இணைந்து பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை. அதனை முற்றாக நிராகரிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பு - 12 இல் அமைந்துள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் கொள்கை அலுவலகத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (10) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாண சபைத் தேர்தல் காலம் தாழ்த்தப்படுவதை நாம் எதிர்க்கின்றோம். எந்தவொரு தேர்தலையும் காலம் தாழ்த்துவது சிறந்ததல்ல.
ஜே.ஆர்.ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் அவர்கள் தேர்தலை நடத்தாமல், சர்வசன வாக்கெடுப்பினை நடத்தி பாராளுமன்றத்தின் ஆயுட் காலத்தை நீடித்ததன் விளைவாக அந்த அரசாங்கம் முழுமையாக சரிவடைந்தது.
எனது ஆட்சிக் காலத்தில் தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டமைக்கும், தற்போது தேர்தல் காலம் தாழ்த்தப்படுகின்றமைக்கும் இடையில் வேறுபாடு காணப்படுகிறது.
பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு முரண்பாட்டினை முன்னாள் பிரதமர் தோற்றுவித்தார். பாராளுமன்ற நடவடிக்கைகளில் எனது தலையீடுகள் காணப்படவில்லை.
பாராளுமன்றத்தில் எனக்கு அதிகாரமும் காணப்படவில்லை. ஆளுங்கட்சியும் காணப்படவில்லை. எதிர்க்கட்சியும் காணப்படவில்லை.
பாராளுமன்றத்தில் சட்ட மூலத்தை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தமை உள்ளிட்ட அனைத்தையும் அவர்களே செய்தனர்.
கட்சியின் கொள்கைக்கு அமைய, நாட்டில் தற்போது காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக பரந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுப்போம்.
எதிர்வரும் சில மாதங்களுக்குள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை புதியதொரு பலம் மிக்க கட்சியாக கட்சியெழுப்புவோம். தேர்தலில் எவ்வாறு போட்டியிடவுள்ளோம் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
நாம் எமது அரசாங்கத்தினை அமைப்பதற்கே தயாராகிக் கொண்டிருக்கின்றோம். கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து கூற முடியாது. ஆனால் நாம் பரந்துபட்ட தேசிய வேலைத்திட்டமொன்றை நாட்டுக்கு முன்வைப்போம். அந்த வேலைத்திட்டங்களுக்கு இணக்கம் தெரிவிப்பவர்களுடன் இணைந்து எதிர்காலத்தை உருவாக்குவோம்.
பழைய கூட்டணிகள் காலாவதியாகியுள்ளமையால் புதிய கூட்டணியையே அமைக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்திக்காக நாம் செயற்படுவதாகக் கூறும் அனைத்து விடயங்களும் அடிப்படையற்றவையாகும். அவ்வாறு எந்தவொரு விடயம் குறித்தும் நாம் கலந்துரையாடவும் இல்லை. தீர்மானிக்கவும் இல்லை. அதனை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.
எந்தவொரு கட்சியுடனோ அல்லது கட்சியின் உள்ளக மட்டத்திலோ எவ்வித கலந்துரையாடலும் முன்னெடுக்கப்படவில்லை. இவை அனைத்தும் எமக்கு எதிராக சோடிக்கப்படும் கதைகளாகும் என்றார்.
No comments:
Post a Comment