புலிகள் அன்று முன்வைத்திருந்த சுய நிர்ணய உரிமையையே சுமந்திரனும் இன்று கோருகின்றார் : பொருளாதாரம் பற்றி பேசும்போது வெளிப்படையாக பல்வேறு விடயங்களை கூறுவதற்கு தவறி விட்டார் - அமைச்சர் சரத் வீரசேகர - News View

About Us

About Us

Breaking

Monday, January 31, 2022

புலிகள் அன்று முன்வைத்திருந்த சுய நிர்ணய உரிமையையே சுமந்திரனும் இன்று கோருகின்றார் : பொருளாதாரம் பற்றி பேசும்போது வெளிப்படையாக பல்வேறு விடயங்களை கூறுவதற்கு தவறி விட்டார் - அமைச்சர் சரத் வீரசேகர

புலிகள் முப்பது ஆண்டுகளாக எதனைக் கோரினார்களோ அதே சுய நிர்ணய உரிமையையே சுமந்திரனும், அவர்களின் பாணியில் கட்டமைக்கப்பட்ட அரசியல் கட்சியினூடாக கோருகின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் 2022.01.18ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஆற்றப்பட்ட கொள்கை விளக்க உரையை மேற்கோள்காட்டி எம்.சுமந்திரன் எம்.பி தெரிவித்தாக பத்திரிகையொன்றில் வெளியான அறிக்கை தொடர்பில் அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையிலேயே அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதி தனது கொள்கை விளக்க உரையில் வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகள் தங்களது அரசியல் கொள்கைகளை ஒருபுறம் தள்ளிவைத்து விட்டு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மிகுந்த வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிப்பதுடன், அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறுமே கூறியிருந்தார்.

அவ்வாறிருக்கையில் வடக்கு, கிழக்கு மக்கள் போராடியது தங்களது நன்மைகளை நாடி அல்ல என்றும், சம உரிமைக்காகவே போராடினார்கள் என்னும் கோணத்திலும் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் சுமந்திரன். 

அம்மக்கள் வசதிகளுக்காக போராடவில்லை என்றும் சமமான குடியுரிமை, சுய நிர்ணய உரிமை மற்றும் சுயாட்சி உரிமைகளுக்காகவே போராடுகிறார்கள் என்றும் அதனைத்தான் அவர்கள் விரும்புகின்றார்கள் என்றும் அவர் கூறுகின்றார்.

பொருளாதாரம் பற்றி பேசும்போது சுமந்திரன் வெளிப்படையாக பல்வேறு விடயங்களை கூறுவதற்கு தவறி விட்டார். இந்த நாட்டின் பொருளாதார முதுகெலும்பான சுற்றுலாத் துறையினால் கிடைக்கக் கூடிய 4.5 பில்லியன் வருமானம் கொவிட் தொற்றின் காரணமாக முற்றாக இழக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாமல்போனதால் ஆயிரக்கணக்கானவர்கள் வேலையிழந்துள்ளனர். 

தடுப்பூசி செலுத்துவதற்காக அரசாங்கம் பெருந்தொகை நிதி செலவிட்டுள்ளது. தனிமைப்படுத்தல் காலங்களில் குடும்பம் ஒன்றுக்கு தலா 5000 ரூபா வழங்கப்பட்டதுடன், சுமந்திரன் உட்பட 15 இலட்சம் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளமும் தொடர்ந்து வழங்கப்பட்டது. மேலும் சர்வதேசத்திடமிருந்து பெற்ற கடன் முறிகளை அரசாங்கம் தொடர்ந்து செலுத்திக் கொண்டேதான் இருக்கின்றது.

நிலைபேறான பொருளாதார அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்காக திட்டங்களையும், வழிகளையும் ஜனாதிபதி காண்பிக்கின்றார். இதனை சுமந்திரன் எள்ளிநகையாடி பேசுகின்றார். ஆனால் ஜனாதிபதி அந்நிய செலாவணியை ஈட்டுவது தொடர்பிலான திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றார்.

சுமந்திரன் ஒரு உண்மையை மறந்திருக்கின்றார். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் ஏனைய நாடுகளை விட கொவிட் இற்கு எதிராக 85 வீதமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி, அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கின்ற ஒரு நாடு இலங்கையாகும்.

புலிகள் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தார்கள். கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள் அதேபோன்று தமிழினத்தின் கல்வியலாளர்கள், புத்திஜீவிகள், அரசியல்வாதிகள் என பலரையும் கொன்று குவித்தார்கள். பல்லாயிரம் பெறுமதிமிக்க அரச சொத்துக்களை அழித்து நாசம் செய்தார்கள். 

அதேபோல் முன்னொருபோதும் இல்லாத வகையில் இளைஞர்களையும், பிள்ளைகளையும் வலுக்கட்டாயமாக கடத்தி சிங்கள மக்களை கொல்வதற்காக அவர்களுக்கு மூளைச்சலவை செய்து பயிற்சி வழங்கி அதனை இலக்காக கொண்டு செயற்பட்டனர். 

ஆனால் மிகவும் சாணக்கியமான முறையில் அரச படைகள் புலிகளை மாத்திரமன்றி அவர்களது சுய நிர்ணயம் என்கிற கருத்தியலையும் தோற்கடித்தனர். அதனை வெற்றி கொள்ள அதிகளவான செலவு மாத்திரமன்றி 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் அவயவங்களை இழந்திருக்கின்றார்கள்.

புலிகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் சுய நிர்ணய உரிமையை வடக்கில் ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். அது இராணுவ பலத்தை பிரயோகித்து சுக்குநூறாக்கப்பட்டது. 

யுத்தத்தின் பின்னர் வடக்கிலே மிகப் பாரியளவான அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. அது 22 வீதமான அபிவிருத்தியாகக் காணப்பட்டது. அப்போது கொழும்பில் அந்த அபிவிருத்தி 7 வீதமாகவே இருந்தது. ஆனால் சுமந்திரன் அப்போது கொழும்பில் வாழ்ந்து கொண்டு சுய நிர்ணயத்துக்காக குரல் எழுப்பிக் கொண்டிருந்தார். இதன் பின்னாலுள்ள மறைமுக நிகழ்ச்சி நிரல் என்ன?

புலிகளினதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் சிந்தனை ஒன்றாகவே இருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பானது புலிகளினால் நேரடியாகவே கட்டுப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்ட கட்சி. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற சிறப்புரிமையினை மீறுகின்றவர்களாக காணப்பட்டனர்.

அதேபோன்று அரசியலமைப்பையும் மீறினார்கள். புலிகளின் கொள்கைப் பிரகடனத்தை கடல் கடந்த நாடுகளில் கொண்டு நடத்துகின்றவர்களாகவும் காணப்பட்டார்கள். புலிகளின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஒருபோதும் குரலெழுப்பவில்லை.

அதேபோன்று புலிகளால் மனிதக் கேடயங்களாக சிறைப்பிடிக்கப்பட்ட மக்களை விடுதலை செய்யும்படி குறைந்தபட்சம் ஒரு கோரிக்கையையேனும் அவர்களால் விடுக்க முடியவில்லை. அதேபோன்று அப்பாவி தமிழ் மக்களுக்கு ஒரு அரிசி பக்கட் கூட அவர்களால் வழங்க முடியவில்லை.

விடுதலைப் புலிகளின் வருடாந்த வருமானம் 400 மில்லியன் டொலராக காணப்பட்டது என்று ஜென்ஸ் என்கிற பாதுகாப்பு வாராந்த சஞ்சிகை குறிப்பிட்டது. 

புலிகளினாலோ, தமிழ் தேசியக் கூட்டமைப்பினராலோ முப்பதாண்டு காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஒரு ஒற்றைப் பாதையைக் கூட நிர்மாணிக்க முடியவில்லை. ஏழை மக்களுக்காக ஒரு வீட்டைக் கூட அவர்களால் கட்டிக் கொடுக்க முடியவில்லை. அவர்களால் சிறந்த மாணவர் ஒருவரைக் கூட உருவாக்க முடியவில்லை. சிறுவர்களை யுத்தத்தின் கேடயங்களாகவே பயன்படுத்தினர். ஒரு வைத்தியசாலையையோ, பாடசாலையையோ கட்டிக் கொடுக்க முடியவில்லை. 

ஆனால் ஆடம்பர வசதிகளுடன் வாழ்வதற்குத் தேவையான பதுங்குகுழிகள் ஏற்படுத்தப்பட்டு, நீச்சல் தடாகங்கள் நிர்மாணிக்கப்பட்டு அதி சொகுசாகவே பிரபாகரன் வாழ்ந்து கொண்டிருந்தார்.

வடக்கிலே மிகக் கொடூரமான ஒருவருடைய ஆட்சிதான் நடந்துகொண்டிருந்தது என்பது யுத்த காலத்தில் எங்களுக்கு நன்றாகத் தெரியும். தமிழ் மக்களையே தங்களுடைய எதிரிகளாக பார்த்தனர். சி.வி.விக்னேஸ்வரன் பிரபாகரனின் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியிருந்தால் அவருக்கு என்ன மரியாதை கிடைத்திருக்கும்?

ஆனால் சுமந்திரன் சுய கௌரவம், சமத்துவம் மற்றும் நீதி பற்றி தமிழ் மக்கள் மத்தியிலே பேசிக் கொண்டிருக்கின்றார். பாதுகாப்புப் படையினர் வடக்கை விடுவித்ததன் காரணமாகவே சுமந்திரன் போன்ற தமிழ்த் தலைவர்களால் தலைநிமிர்ந்து நடக்கவும் கௌரவமாக தமது அரசியலை முன்னெடுக்கவும் முடிந்தது. 

இன்று சுமந்திரனால் ஜனாதிபதியை அச்சமின்றி விமர்சிக்க முடிகின்றது. ஆனால் தமிழர்களின் ஏகபிரதிநிதி என்று அறிவித்த பிரபாகரனின் ஆட்சியில் பிரபாகரனுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேச அவர்களுக்கு சுதந்திரம் இருக்கவில்லை. 

தமக்கு நீதியோ, மரியாதையோ மற்றும் சமத்துவமோ கிடைக்காது என்று தெரிந்தும் கூட பிரபாகரனின் அதிகாரத்தை ஏற்க சம்மதித்ததனால் சுமந்திரனும் தமிழ்த் தலைவர்களும் தங்களது மானத்தை இழந்தனர். அரசாங்கத்தின் கீழ்தான் சுதந்திரமான மனிதர்களாக செயற்பட முடிந்தது.

தமிழர்களுக்கு சுய நிர்ணயம் அவசியம் என்று இன்னமும் சுமந்திரன் கருதினால் தமிழர்களுக்கு பிரத்தியேகமாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும் மறுக்கப்பட்ட உரிமைகள் என்ன என்பதை அவர் தெளிவாக குறிப்பிட வேண்டும். 

சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அல்லது பறங்கியர், மலாய் இனத்தவர்களுக்கும் பாகுபாடுகள், குறைகள் ஏதும் உள்ளனவா? 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணம் எவ்வாறு இருந்தது, இப்போது எவ்வாறு இருக்கின்றது என்பதை கற்பனை செய்து பார்க்க வேண்டும்.

பயங்கரவாத குண்டுகளை சுமந்தவர்களின் எவ்வித அச்சுறுத்தல்களும் இன்று அங்கு இல்லை. மக்கள் கொல்லப்படுவதற்காக கேடயங்களாக பாவிக்கப்பட்டு வந்த நிலை இன்று அங்கில்லை. அம்மக்கள் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். புலிகளுக்கு வரி செலுத்துவதைப் போன்றல்லாது சுதந்திரமாக தொழிலில் ஈடுபடுகின்றனர். 

தற்போது உட்கட்டமைப்பு வசதிகள் பாரியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனாலேதான் ஜனாதிபதி தனது கொள்கை விளக்க உரையில் வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகள் தத்தமது வித்தியாசமான அரசியல் எண்ணக்கருக்களை தள்ளிவைத்து விட்டு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறும், அந்த பிரதேசத்தில் வாழுகின்ற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரியிருந்தார். இதுவே இந்த நாடும் மக்களும் இன்று இறுதியாக இந்த நாட்டின் மீது அபிமானம் கொண்ட மக்களிடத்தில் விடுக்கும் கோரிக்கையாகும்.

இன்னுமொரு விடயத்தை கவனமாக உற்றுநோக்குதல் அவசியம். தெற்கிலே 50 வீதத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் சிங்கள மக்களுடனும், முஸ்லிம்களுடனும் ஐக்கியமாக வாழ்கின்றனர். அவர்கள் வெவ்வேறு வகையான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

வடக்கிலுள்ள தமிழ் மக்கள் ஒன்றைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் எதனைக் கொண்டு வரப் போகின்றார்கள்? இப்போது எதனை வைத்திருக்கின்றார்கள்? நீங்கள் சுமந்திரனிடம் கேளுங்கள் சுய நிர்ணயம், சுயாட்சி அடையப்படுமாகவிருந்தால் நீங்களும், உங்கள் குடும்பத்தினர்களும் வடக்கில் வாழ்வீர்களா என்று. அவ்வாறு வாழும்போது இங்கிருக்கின்ற சமூகங்களுக்கு இடையில் சுய கௌரவமாகவும், இறைமையுடனும், சமத்துவமாகவும், நீதியாகவும் உங்களால் எங்களை நடத்த முடியுமா என்று கேளுங்கள். 

சுய நிர்ணயத்திற்காக போராடுகின்றோம் என்று கூறுவார்களே தவிர வட மாகாணத்திலுள்ள ஏனைய தமிழ் மக்களோடு இணைந்து ஒற்றுமையாக அவர்கள் வாழவுமில்லை, வாழவும் மாட்டார்கள். அவர்களின் பிள்ளைகளால் கூட அது முடியாது. அவர்கள் இன்னும் பெருமைவாத கோட்பாடுகளை வைத்துக் கொண்டு தமிழர்களை பிரிவினைவாதிகளாக காட்டிக் கொண்டேயிருப்பார்கள்.

அவர்களால் தமிழர்களுடன் ஒற்றுமையாக வாழ முடியாது. இதனை புரிந்து கொண்டுதான் ஜனாதிபதி தத்தமது வித்தியாசமான அரசியல் சித்தாத்தங்களை விட்டுவிட்டு அந்த மக்களுக்கு உதவுவதற்கான நேரம் இதுவே என்றும், இந்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்குங்கள் என்றும் கூறினார். 

இதனை தமிழ் மக்களே புரிந்து செயற்படுதல் வேண்டும். அதிக வசதி வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு முன்வந்துள்ள ஜனாதிபதியின் கருத்துக்கு ஆதரவளிப்பது பற்றி கௌரவமான தமிழ் மக்கள் தீர்மானமொன்றுக்கு வருவது இக்காலகட்டத்தில் மிக அவசியமாகும்.

இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தனது அறிக்ைகயில் தெரிவித்துள்ளார்.

றிசாத் ஏ காதர்

No comments:

Post a Comment