வட கொரியா ஏவுகணை சோதனை : விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின - News View

About Us

About Us

Breaking

Monday, January 31, 2022

வட கொரியா ஏவுகணை சோதனை : விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின

கடந்த 5 ஆண்டுகளில் மிகவும் சக்தி வாய்ந்தது என வட கொரியா கூறிவரும் ஏவுகணை சோதனையின் புகைப்படங்களை அந்நாடு வெளியிட்டுள்ளது.

விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட இந்த அசாதாரண புகைப்படங்கள், கொரிய தீபகற்பத்தின் பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைக் காட்டுகின்றன.

ஐ.ஆர்.பி.எம் எனப்படும் இடைநிலை தூர பாலிஸ்டிக் வகை, ஹ்வாசோங்-12 (Hwasong-12 ) என பெயரிடப்பட்டுள்ள ஏவுகணையை சோதனை செய்ததாக திங்கட்கிழமை வட கொரியா உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த ஏவுகணை அதன் முழு சக்தியில், ஆயிரக்கணக்கான மைல்கள் பயணிக்க முடியும். மேலும், அமெரிக்கப் பகுதியான குவாம் போன்ற பகுதிகளும், ஏவுகணையால் தாக்கப்படும் தொலைவில் உள்ளன.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஏவுகணை சோதனை, சர்வதேச சமூகம் மத்தியில் மீண்டும் எச்சரிக்கையை எழுப்பியுள்ளது.

பியோங்யோங் கடந்த மாதத்தில் மட்டும் 7 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் பிற நாடுகளால் இச்சோதனைகள் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது.

வட கொரியா ஏவுகணை மற்றும் அணு ஆயுதச் சோதனைகளை மேற்கொள்வதற்கு எதிராக ஐ.நா கடுமையான தடைகளை விதித்துள்ளது. ஆனால், கிழக்கு ஆசிய நாடான வட கொரியா இந்த தடைகளைத் தொடர்ந்து மீறி வருகிறது.

சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியுள்ள காரணத்தால், அந்நாட்டுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்தனர்.

ஹ்வாசோங்-12 ஏவுகணை சோதனையில் என்ன நடந்தது?
ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த ஏவுகணை சோதனையை, தங்கள் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளில் கண்டறிந்த பின்னர், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் முதலில் அது குறித்து அறிவித்தது.

இந்த ஏவுகணை 2,000 கி.மீ. (1,240 மைல்கள்) உயரத்தை எட்டியதாகவும், 800 கி.மீ (500 மைல்கள்) தூரத்திற்கு 30 நிமிடங்கள் பறந்ததாகவும் ஜப்பானிய மற்றும் தென் கொரிய அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

இந்த ஏவுகணை, ஜப்பான் கடலில் விழுந்தது. முழு ஆற்றல் மற்றும் நிலையான பாதையில் இந்த ஏவுகணை, 4,000 கி.மீ. தூரம் வரை செல்ல முடியும்.

ஏவுகணை ஏவப்பட்டதை வட கொரியா தனது அரசு ஊடக அறிக்கைகள் மூலம் திங்கட்கிழமை உறுதி செய்தது. கட்டுப்பாட்டை மீறிய இத்தகைய ஏவுகணை சோதனைகளின் விவரத்தை, பொதுவாக சோதனைக்கு பிந்தைய நாளே அந்நாட்டின் அரசு ஊடகங்கள் வெளியிடும்.

இந்த சோதனை, "ஏவுகணையின் துல்லியத்தன்மை குறித்து உறுதிப்படுத்த" மேற்கொள்ளப்பட்டதாக, அரசு செய்தி முகமையான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.

"அண்டை நாடுகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு" தரையிறங்கும் வகையிலான கோணத்தில் ஏவுகணை ஏவப்பட்டது.

மேலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏவுகணை சோதனை குறித்த புகைப்படங்களும் அரசு ஊடக அறிக்கையில் அச்சிடப்பட்டிருந்தன. அவற்றுள் சில ஏவுகணையின் வார்ஹெட் பகுதியில் பொருத்தப்பட்ட கமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், இரண்டு புகைப்படங்கள் ஏவுகணை ஏவப்பட்ட தருணத்தைக் காட்டுகின்றன, மற்றொன்று, ஏவுகணை நடுவானில் சென்றுகொண்டிருக்கும்போது விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

ஞாயிற்றுக்கிழமை ஏவுகணையை ஏவியபோது வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் உடன் இல்லை. கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு, ஹைபர்சோனிக் கிளைட் ஏவுகணை சோதனையின்போது அவர் வருகை இருந்ததை புகைப்படங்கள் காட்டின.

ஏவுகணை கண்டறிதல் அமைப்புகளைத் தவிர்க்க வடிவமைக்கப்பட்ட ஒரு மேம்பட்ட வகை ஏவுகணைத் தொழில்நுட்பமே ஹைபர்சோனிக் கிளைட் ஏவுகணை ஆகும். அந்த ஏவுகணைகள் வட கொரியாவால் மட்டுமே மொத்தம் மூன்று முறை சோதிக்கப்பட்டது.

வட கொரியா ஏன் ஏவுகணையை ஏவியது?
வட கொரியா ஆய்வாளர் அங்கிட் பாண்டா, ஏவுகணை சோதனையின்போது கிம் இல்லாதது மற்றும் ஏவுகணையை விவரிக்க ஊடகங்களில் பயன்படுத்தப்பட்ட மொழி ஆகியவை, இந்த சோதனை புதிய தொழில்நுட்பத்தை காட்டுவதற்கு பதிலாக, ஏவுகணை அமைப்பு செயல்படுவதை சரி பார்க்கும் நோக்கம் கொண்டது என்று கூறினார்.

இருப்பினும், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் கீழ், வட கொரியா அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், கணிசமான அளவிலான அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணையான ஹ்வாசோங்-12-ஐ வட கொரியா ஏவுவது இதுவே முதல்முறை.

கடைசியாக ஹ்வாசோங்-12 2017 இல் சோதிக்கப்பட்டது, பியாங்யாங் அதை ஜப்பானிய தீவான ஹொக்கைடோ மீது இரண்டு முறை அனுப்பியது உட்பட ஆறு முறை ஏவப்பட்டது, இது அங்கு வசிப்பவர்களுக்கு எச்சரிக்கையைத் தூண்டியது.

2018 ஆம் ஆண்டில், கிம், டிரம்பை சந்தித்த பிறகு, வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அதன் நீண்ட தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்வதற்கு தடை விதித்தது.

ஆனால், அடுத்த ஆண்டு, இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மோசமடைந்ததால், இனி இந்த அறிவிப்புக்குக் கட்டுப்பட மாட்டோம் என கிம் கூறினார்.

தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் சமீபத்திய ஏவுகணை சோதனையின் மூலம், வட கொரியா "ஏவுகணை சோதனைகள் மீதான தடை அறிவிப்பை அழிக்கும் நிலைக்கு வந்துவிட்டது" என்று ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

இந்த ஆண்டு வட கொரியாவின் ஏவுகணைச் செயல்பாடு அதிகரித்ததற்கு பல காரணங்கள் உள்ளன, இது கிம் தனது புத்தாண்டு உரையில் முதன்முதலில் சுட்டிக்காட்டப்பட்டது.

நீண்ட காலமாக நின்றுபோன அணுசக்திப் பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்காவை மீண்டும் அழுத்தம் கொடுப்பதற்கும், பிராந்திய மற்றும் உலக வல்லரசுகளுக்கு வலிமையைக் காட்டுவதற்கும், புதிய பொறியியல் மற்றும் ராணுவக் கட்டளை அமைப்புகளை சோதிக்கும் நடைமுறைத் தேவையின் காரணமாகவும் கிம்மின் விருப்பத்தை இந்த சோதனைகள் பிரதிபலிக்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த வார இறுதியில் பெய்ஜிங்கின் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் தென் கொரிய அதிபர் தேர்தல் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில், இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தென் கொரியாவில் வசிக்கும் டிராய் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் பேராசிரியரான டாக்டர் டேனியல் பிங்க்ஸ்டன் கூறுகையில், "தென் கொரியாவையும், வரவிருக்கும் அதிபரையும் பயமுறுத்துவதற்கு அவர்களின் கடந்த கால நடத்தையுடன் இது ஒத்துப்போகிறது" என தெரிவித்தார்.

அமெரிக்கா தலைமையிலான பொருளாதாரத் தடைகள், தொற்றுநோய் சிக்கல்கள் மற்றும் பல தசாப்தங்களாக தவறான நிர்வாகத்தின் கீழ் வட கொரிய பொருளாதாரம் போராடி வருவதால், இத்தகைய ஏவுகணை சோதனைகளில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், வட கொரியா மீது அமெரிக்கா மேலும் பொருளாதார தடைகளை விதித்தது.

No comments:

Post a Comment