நல்லாட்சி அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை திறந்து வைப்பதினால் அரசின் மீது கடும் வெறுப்படைந்துள்ள மக்களை திசை திருப்ப முடியாது - ஹிதாயத் சத்தார் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 1, 2022

நல்லாட்சி அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை திறந்து வைப்பதினால் அரசின் மீது கடும் வெறுப்படைந்துள்ள மக்களை திசை திருப்ப முடியாது - ஹிதாயத் சத்தார்

2015 நல்லாட்சி அரசாங்கத்தினால் அப்போதைய நெடுஞ்சாலைகள் அமைச்சர்களான லக்‌ஷ்மன் கிரியெல்ல மற்றும் கபீர் ஹாஷிம் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்டு 85 சதவீதமான பகுதி நிறைவடைந்திருந்த பிபில - செங்கலடி வீதியை நிறைவு செய்து திறந்து வைத்த தற்போதைய அரசாங்கம் அதற்கு பூரணமாக சொந்தம் கொண்டாடுவது நகைப்புக்குரிய அரசியல் நடவடிக்கையாகும். இவ்வாறான நடவடிக்கைகளால் அரசின் மீது வெறுப்படைந்துள்ள நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி கண்டி மாவட்ட அமைப்பாளரும் முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஹிதாயத் சத்தார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சவூதி அரேபிய நிதி உதவியின் கீழ் 7,200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட பிபிலையிலிருந்து செங்கலடி வரையிலான 86.7 கிலோ மீற்றர் பாதை பொதுமக்களின் பாவனைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்த வீதி அபிவிருத்தி நல்லாட்சி அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு பெருமளவிலான பகுதி செய்து முடிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் அரசாங்கமும் நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் தற்போதைய அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு திறந்து வைத்தது போன்று விளம்பரப்படுத்துகின்றனர். இது வெட்கக்கேடான நகைப்புக்குரிய அரசியலாகும். இந்த அரசாங்கத்தினால் குறித்த அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. 

மேலும் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட வயம்ப பல்கலைக்கழக அபிவிருத்தி தொடர்பான திட்டம்கூட சவூதி அரேபிய அரசாங்கத்தினால் நல்லாட்சி அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கினங்கவே தந்துதவினார்கள் மேலும் அந்த அபிவிருத்தி தொடர்பான வரைபுகள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் சம்பந்தமான விடயங்கள் கொவிட் காரணமாக சற்று தாமதமாகியதாலேயே அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.

2015 நல்லாட்சி அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு 80 சதவீதம் நிறைவடைந்த பிபிலை செங்கலடி பாதையை போன்றே லக்‌ஷ்மன் கிரியெல்ல அமைச்சராக இருந்தபோது ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட புதிய களனி பாலம் மற்றும் எதிவரும் 2022 ஜனவரி 15ம் திகதி திறக்கப்படவுள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 2வது பாகமான மீரிகம குருநாகல் வரையிலான 41 கிலோ மீட்டரின் 38 கிலோ மீட்டர் வேலைகள் முடிவடைந்திருந்த நிலையில் அதனை எப்போது மக்கள் பாவனைக்காக திறந்துவிடப் போகிறீர்கள் என்று 2019ம் ஆண்டு பாராளுமன்றத்தில் அப்போதைய நெடுஞ்சாலைகள் அமைச்சரும் நாட்டின் பிரதமருமான மஹிந்த ராஜபக்‌ஷவிடம் லக்‌ஷ்மன் கியெல்ல கேள்வி எழுப்பியது நாட்டு மக்களுக்கு ஞாபகமிருக்கும் என்று நினைக்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment