மின் வெட்டு கிடையாது : பெப்ரவரி முழுவதும் மின்சாரத் தேவையை நிர்வகிக்க முடியும் : மின்சார சபையின் யோசனைக்கு அனுமதி இல்லை : பாவனையாளர்கள் சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்தவும் : A/L பரீட்சை மாணவர்களுக்கு தொடர்ச்சியாக மின்சாரம் - மேலதிக விபரம் உள்ளே - News View

About Us

About Us

Breaking

Monday, January 31, 2022

மின் வெட்டு கிடையாது : பெப்ரவரி முழுவதும் மின்சாரத் தேவையை நிர்வகிக்க முடியும் : மின்சார சபையின் யோசனைக்கு அனுமதி இல்லை : பாவனையாளர்கள் சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்தவும் : A/L பரீட்சை மாணவர்களுக்கு தொடர்ச்சியாக மின்சாரம் - மேலதிக விபரம் உள்ளே

நாளை ஆரம்பமாகும் பெப்ரவரி மாதம் முழுவதும் மின்சாரத் தேவையை நிர்வகிக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட பெப்ரவரி 04ஆம் திகதி வரையான மின் வெட்டு தொடர்பான யோசனைக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இலங்கை மின்சார சபையானது ஜனவரி 25 ஆம் திகதி முதல் பெப்ரவரி 04 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு அனுமதி வழங்குமாறு முன்மொழிவொன்றை வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த ஜனக ரத்நாயக்க, இலங்கை மின்சார சபையின் மின் வெட்டுக்கான முன்மொழிவைத் தொடர்ந்து, மின் உற்பத்தி நிலையங்களின் நிலை மற்றும் எரிபொருள் விநியோகம் குறித்து நாங்கள் தொடர்ந்து மீளாய்வு செய்தோம். இதனைத் தொடர்ந்து மின் வெட்டுக்கான அவசியம் இல்லை என்பதால் இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதற்கு அனுமதிக்கவில்லை. 

உத்தேச மின் வெட்டு ஏற்படுத்தப்பட்டிருந்தால் ஒட்டு மொத்த பொருளாதாரத்திற்கும் சுமார் 31 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கும். மின் வெட்டை தடுத்ததன் மூலம் 31 பில்லியன் ரூபாவை எம்மால் சேமிக்க முடிந்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் பெப்ரவரி மாதத்திலும் மின் வெட்டை மேற்கொள்ளாது தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

குறிப்பாக உயர்தரப் பரீட்சைகள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளன. இந்த பரீட்சைகளை வெற்றிகரமாக நடாத்த, தடையின்றி மின்சாரத்தை வழங்க வேண்டும்.

இதேவேளை, மறுசீரமைப்புப் பணிகளைத் தொடர்ந்து செயலிழந்திருந்த நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் 3ஆவது மின்னுற்பத்தி தொகுதி மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது. 

மேலும், பராமரிப்புக்காக கட்டமைப்பில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட 130MW வலு கொண்ட Sojitz களனிதிஸ்ஸ தனியார் மின்னுற்பத்தி நிலையம் மீண்டும் பெப்ரவரி 02 ஆம் திகதி முதல் அதன் செயற்பாட்டை ஆரம்பிக்கவுள்ளது. எனவே இதன் மூலம் தடையின்றி மின்சாரத்தை வழங்குவது மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணெய் கிடைத்துள்ளதாகவும், எதிர்காலத்தில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை சுத்திகரிக்கும் பணியை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சுத்திகரிப்பு நிலையம் எரிபொருள்கள் மற்றும் நப்தா துணை தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது. சபுகஸ்கந்த, கொழும்பு பேட்ஜ், வெஸ்ட்கொஸ்ட், வடக்கு ஜனனி போன்ற சுமார் 495 MW மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் தேவைப்படுகிறது. 

தற்போது கிடைத்துள்ள ​​கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எரிபொருளின் மூலம் 495 MW மின்சாரத்தை சுமார் 13 நாட்களுக்கு செயற்படுத்த முடியும். அதேபோன்று, 150 MW திறன் கொண்ட நப்தா உற்பத்தி செய்யும் அதே அளவிலான மின் உற்பத்தி நிலையமாகும். இதனை 5 நாட்களுக்கு இயக்க முடியும்.

இவ்வாறானதொரு சவாலான சூழ்நிலையில் மின்சார விநியோகத்தை நிர்வகிப்பதற்கு மின்சார நுகர்வோரின் உதவி மிகவும் அவசியமானது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) சுட்டிக்காட்டியுள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை தெளிவுபடுத்துகையில், எரியும் மின் விளக்குகளை குறைத்தல், வாயுச் சீராக்கிகளின் பயன்பாட்டை சிக்கனமாக மேற்கொள்ளுதல், தெருவிளக்குகள் ஒளிரும் நேரத்தைக் குறைத்தல் போன்ற செயற்பாடுகளின் மூலம் நுகர்வோர் உதவியுடன் மேற்கொள்ளக்கூடிய பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் முன்மொழிந்துள்ளோம். 

இந்த நடவடிக்கைகள் மூலம் தினமும் 3.7 மணிநேரத்திற்கு 1 GW மின்சாரத்தை சேமிக்க முடியுமென நாம் மதிப்பீடு செய்துள்ளோம். அதன் அடிப்படையில், 150 MW மின் உற்பத்தி நிலையத்தை 24 மணி நேரத்திற்கு நிறுத்தி வைக்க முடியும்.

இவ்வேளையில் மின்சாரத்தை சேமிப்பதில் உதவுவது மின்சார நுகர்வோரின் பொறுப்பாகும். அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களால் இயன்றவரை மின்சாரத்தைப் சேமிப்பதில் உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதுபோன்ற சூழ்நிலையில் மின்சாரம் வீணடிக்கப்பட்டால், மின் வெட்டே இறுதித் தீர்வாக இருக்கும்.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான மின் பிறப்பாக்கிகள் மூலம் சுமார் 300 MW மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கருத்து வெளியிடுகையில்,

எமக்கு உடனடியாக மின்சாரத்தைப் பெறுவதற்கான வழிகளில் ஒன்று பல்வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான இத்தகைய மின் பிறப்பாக்கிகளாகும். 

இதுவரை 100 MW உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளோம். இந்த வாரம் மற்றொரு குழுவுடன் கலந்துரையாடவுள்ளோம். 

அடுத்த மாத இறுதிக்குள் அரச மற்றும் தனியார் மின் உற்பத்தியாளர்கள் மூலம் 300 MW மின்சாரத்தை விநியோகிப்பது குறித்து இறுதி முடிவு எட்டப்படும் என நம்புகிறோம் என்றார்.

No comments:

Post a Comment