சட்டத்துக்கு முரணாக காணிகள் அபகரிப்பு - மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Friday, December 31, 2021

சட்டத்துக்கு முரணாக காணிகள் அபகரிப்பு - மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் குற்றச்சாட்டு

சட்டத்துக்கு முரணாக காணிகளை அபகரித்து வைத்திருக்கும் தனிப்பட்ட நபர்கள் தொடர்பில் பிரதேச செயலகத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் போது அவர்களே விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி வருவதாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் ந.றஞ்சனா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் மற்றும் காணி உத்தியோகத்தர்களுக்கு எதிராக குறிப்பிட்ட சிலரால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் நேற்று முன்தினம் (30) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக் காலமாக மாந்தை கிழக்குப் பிரதேச செயலகத்தின் காணி முகாமைத்துவத்திற்கு எதிராக விஷமத்தனமான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இதில் எந்தவிதமான உண்மைத்தன்மைகளும் இல்லை. இது தொடர்பில் பிரதேச செயலகத்துடன் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும்.

அளவுக்கதிகமான காணிகளை அபகரித்து வைத்திருக்கும் தனிப்பட்டவர்களின் காணிப் பிணக்குகள் தொடர்பில் பிரதேச செயலகத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில் அவர்களே இவ்வாறான விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி வருகின்றார்கள். 

வெளிப்படுத்தல் உறுதிகள் மூலம் பெருந்தொகையான காணிகளை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள் மற்றும் பொருத்தமற்ற முறையிலே காணி ஆவணங்களை பெற்றுள்ளவர்கள் இவ்வாறான கருத்துக்களை பரப்பி வருகின்றார்கள்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பிலும் ஆலோசித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment