(எம்.ஆர்.எம்.வசீம்)
பிட்ச் ரேட்டிங் நிறுவனம் இலங்கையின் கடன் தரப்படுத்தலில் ஒரு தரத்தினால் தரமிறக்கி இருப்பது புதுமையான விடயமல்ல. இதனை ஏற்றுக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல வேண்டும். குறிப்பாக தனவந்தர்களிடம் பெறப்படும் வரியை அதிகரிக்க வேண்டும் என ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் பேராசிரியருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
சர்வதேச கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான பிட்ச் ரேட்டிங் நிறுவனம் கடன் மீள் செலுத்துகை ஆற்றலில் இலங்கையை ஒரு தரத்தினால் தரமிறக்கி இருப்பது குறித்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எமது நாட்டின் வெளிநாட்டு செலாவணி 8 டொலர் பில்லியன் இருந்து வந்தது. தற்போது அது 1.3 டொலர் பில்லியன் வரை குறைந்திருக்கின்றது. அரசாங்கத்தின் வருமானங்கள் குறைவடைந்திருப்பதனாலும் ஏற்றுமதிகள் குறைவடைந்திருப்பதனாலும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து செல்கின்றது.
பிரதானமாக எமது வரிக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தினால் இதற்கு பாரியதொரு தாக்கம் ஏற்பட்டிருக்கின்றது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததுடன் வட் வரியை 15 வீதத்தில் இருந்து 8 வீதம் வரை குறைத்தது. இதனால் பாரியதொரு வருமானம் அரசாங்கத்துக்கு இல்லாமல்போனது.
சாதாரண மக்களிடம் அறவிடப்படும் வரியை குறைத்து தனவந்தர்களுக்கான வரியை அதிகரித்திருந்தால் பரவாயில்லை. ஆனால் தற்போது தனவந்தர்களிடமிருந்து 14 வீத வரியே அறவிடப்படுகின்றது. கடந்த அரசாங்க காலத்திலும் இந்த வரி கொள்கையே பின்பற்றப்பட்டு வந்தது. அதனையே இந்த அரசாங்கமும் பின்பற்றிச் செல்கின்றது.
இந்நிலையில் பிட்ச் ரேட்டிங் நிறுவனம் கடன் மீள் செலுத்துகை ஆற்றலில் இலங்கையை சீ.சீ.சீ என்ற தரத்தில் இருந்து சீ.சீ என்ற தரத்துக்கு தரமிறக்கி இருப்பது புதுமையான விடயமல்ல.
ஏனெனில் வருடத்துக்கு ஒரு பில்லியன் கடன் செலுத்த வேண்டி இருக்கின்றது. ஆனால் எமது கைவசம் இருக்கும் வெளிநாட்டு செலாவணி 1.3 டொலர் பில்லியனாகும். அதனால் எமது பொருளாதார வீழ்ச்சியை ஏற்றுக் கொண்டு அதனை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் சரியான பொருளாதார முகாமைத்துவ நடவடிக்கை மேற்கொண்டால் இந்த நிலையில் இருந்து எமக்கு மீள முடியும். 1972 ஆம் ஆண்டும் இதனையும்விட பாரிய பொருளாதார நெருக்கடி உலகளாவிய ரீதியில் ஏற்பட்டது.
எரிபொருட்களின் விலை 7 மடங்கு அதிகரித்தது. சீனி ஒரு டொன் 40 தங்க காசுகளில் இருந்து 600 தங்க காசு வரை அதிகரித்தது. ஆனால் அப்போது நிதி அமைச்சராக இருந்த என்.எம். பெரேரா இதனை முறையாக கையாண்டார்.
வியாபாரிகள் தாங்கள் நினைத்த பிரகாரம் பொருட்களை விற்பனை செய்யாமல் கூட்டுறவு முறைமையை மேற்கொண்டார். அதனால் உணவு பஞ்ஞத்தால் பல நாடுகளில் மக்கள் உயிரிழந்தபோதும் எமது நாட்டில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.
அதனால் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு வியாபாரிகள் தாங்கள் நினைத்த பிரகாரம் பொருட்களின் விலையை அதிகரித்து விற்பனை செய்வதை அரசாங்கம் நிறுத்த வேண்டும். அதற்காக கூட்டுறவு முறையை முன்றேற்ற வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment