தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அரசியல் கட்சிகள் பெருமளவு பணம் செலவிடுவதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டமொன்றை கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், இது தொடர்பில் பாராளுமன்றத்திலுள்ள அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடியே தீர்மானிக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இலங்கை பிரஜைகளிடமுள்ள இறைமையின் பிரதான அடிப்படையாக சர்வஜன வாக்குரிமை அமைந்துள்ளது. அந்த உரிமை தேர்தலின் போது மக்கள் விருப்பாக சுதந்திரமானதாகவும் நியாயமானதாகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
தேர்தலின் போது மக்களுடைய வாக்குகளுக்காக ஏதாவது ஒரு வேட்பாளர், கட்சி அல்லது குழுவொன்று எந்தவொரு கட்டுப்பாடுகளின்றி அதிகளவில் பணம் செலவிடுவது பொதுமக்களின் விருப்பு தொடர்பில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மேற்கொள்ளும் செலவை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் கட்சியால் மேற்கொள்ளப்படும் செலவுகளைக் கட்டுப்படுத்தும் தேவைகள் தொடர்பாக இலங்கையில் கலந்துரையாடப்பட்டு வருகிறது. இந்தியா உள்ளிட்ட அதிகமான நாடுகள் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் சட்ட ஒழுங்குகளை விதித்துள்ளன.
தேர்தலின் போது இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளைக் குறைப்பதற்காகவும், ஏற்பாடுகளைத் தயாரிப்பதற்காகவும் தற்போதுள்ள கட்டளைச் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்கு, 2017 ஒக்ேடாபர் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பாராளுமன்ற தேர்தல் கட்டமைப்பு மற்றும் சட்ட ஒழுங்குகளுக்கமைய மறுசீரமைப்புக்களை அடையாளங் கண்டு, திருத்தங்களைச் சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட செயற்குழுவால் அந்த தரப்பினர்களுடன் கலந்துரையாடி, உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ள விடயங்களைக் கருத்தில் கொண்டு முன்மொழியப்பட்ட திருத்தப்பட்ட சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த விடயத்தில் பாரளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி இது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment