எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ பரவலால் ஏற்பட்ட பாதிப்புகள் : சட்ட நடவடிக்கை, இழப்பீடு கோரும் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் விசாரணைக்கு ஏற்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 1, 2021

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ பரவலால் ஏற்பட்ட பாதிப்புகள் : சட்ட நடவடிக்கை, இழப்பீடு கோரும் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் விசாரணைக்கு ஏற்பு

(எம்.எப்.எம்.பஸீர்)

எக்ஸ்பிரஸ் பேர்ள் எனும் சரக்குக் கப்பல், தீ பரவலுக்கு உள்ளான விவகாரத்தில் பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து தரப்பினருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும், இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா வீதம் இழப்பீட்டை பெற்றுத் தருமாறு கோரியும் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக உயர் நீதிமன்றம் நேற்று (1) அறிவித்தது.

அத்துடன் மனுக்கள் தொடர்பில் ஆட்சேபனைகளை முன்வைக்க, மனுக்கள் எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி மீள பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நீதியரசர் காமினி அமரசேகர தலைமையிலான, நீதியரசர்களான ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இம்மனுக்கள் நேற்று பரிசீலிக்கப்பட்டன. இதன்போதே மனுதாரர்களின் சட்டத்தரணிகள் முன் வைத்த வாதங்களை கருத்தில் கொண்டு உயர் நீதிமன்றம் மேற்படி உத்தரவை வழங்கியது.

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித், மனித உரிமைகள் செயற்பாட்டாளரான அருட் தந்தை சரத் இத்தமல்கொட, மீனவர்களான டப்ளியூ. காமினி பெர்ணான்டோ, வர்ணகுலசூரிய கிறிதோபர் சரத் பெர்ணான்டோ, சூழலியலஆளரான கலாநிதி அஜந்தா பெரேரா மற்றும் ஜே. ஜகதீஷ்வரன் ஆகியோரே இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, மீன் பிடித் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, துறைமுக அதிகார சபை தலைவர், சுற்றாடல் அமைச்சின் செயலர் வைத்தியர் அனில் ஜாசிங்க, எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள் நாட்டு பிரதிநிதி சீ கன்சோர்டியம் தனியார் நிறுவனம், சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை, சட்டமா அதிபர் உள்ளிட்ட 12 பேர் பிரதிவாதிகளாக இம்மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

குறித்த கப்பல் விவகாரம் காரணமாக பாணந்துறை முதல் நீர் கொழும்பு வரையிலான கடற் பரப்பில் மீன் பிடி நடவடிக்கைகள் தடை செய்யப்ப்ட்ட நிலையில், அதனால் பாதிக்கப்ப்ட்ட மீனவர்கள் அனைவருக்கும் தலா 5 இலட்சம் ரூபா வீதம் இழப்பீடு செலுத்த அரசாங்கத்துக்கு உத்தர்விட வேண்டும் என குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment