வைத்தியர்களுக்கான இடமாற்றப் பட்டியலை வெளியிடுவதை சுகாதார அமைச்சு திட்டமிட்டு கால தாமதப்படுத்துகின்றது - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, December 31, 2021

வைத்தியர்களுக்கான இடமாற்றப் பட்டியலை வெளியிடுவதை சுகாதார அமைச்சு திட்டமிட்டு கால தாமதப்படுத்துகின்றது - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(எம்.மனோசித்ரா)

வைத்தியர்களுக்கான இடமாற்றப் பட்டியலை வெளியிடுவதை சுகாதார அமைச்சின் அதிகாரிகள் திட்டமிட்டு கால தாமதப்படுத்துகின்றனர். இந்த சர்ச்சைக்கு துரித தீர்வு வழங்கப்படா விட்டால் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் என்று வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டுக்கான வைத்தியர்களின் இடமாற்ற பட்டியலை வெளியிடும் விவகாரத்தில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளால் திட்டமிட்டு கால தாமதம் ஏற்பபடுத்தப்படுகிறது.

2022 ஆம் ஆண்டுக்கான இடமாற்ற பட்டியல் எவ்வாறு அமுல்படுத்தப்படவுள்ளது என்பதை பொது சேவைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அத்தோடு அந்த பட்டியலுக்கமைய ஜனவரி முதலாம் திகதி முதல் இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இது தொடர்பில் அநாவசியமான கேள்விகளை எழுப்பி இதனை திட்டமிட்டு காலம் தாழ்த்துகின்றனர்.

இவ்வாறான திட்டமிட்ட செயற்பாடுகளால் நோயாளர்களே அசௌகரியத்தை எதிர்கொள்ள நேரிடும். எனவே வைத்தியர்களின் இடமாற்ற பட்டியலை தெளிவாக துரிதமாக வெளியிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அவ்வாறில்லை எனில் எதிர்வரும் 3 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்தில் இது குறித்து தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும்.

எனவே இந்த பிரச்சினைக்கு துரித தீர்வை வழங்குமாறு சுகாதார அமைச்சை வலியுறுத்துகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment