தமிழ் நாடு, குன்னூர் பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் இந்திய பாதுகாப்புப் படைகளின் பிரதானி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய முப்படைகளின் தளபதியும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பிபின் ராவத் சென்ற விமானப்படை விமானம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இன்று காலை வீழ்ந்து நொறுங்கியுள்ளது.
இச்சம்வபம் தொடர்பில் 10 தகவல்கள்
நீலகிரி மாவட்டம் வெலிங்கடன் அருகே இராணுவ ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டவர்கள் பயணித்துள்ளனர். இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.
இன்று காலை 11.00 - 11.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
க்ரூப் கேப்டன் வருண் சிங் எனும் விமானப்படை அதிகாரி தற்போது வெலிங்டனில் உள்ள இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த ஹெலிகொப்டர் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்கடன் இராணுவ பயிற்சி மையத்துக்கு சென்றபோது குன்னூர் காட்டேரி பார்க் அருகே விழுந்து நொறுங்கியுள்ளது.
வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு படைகளின் ஊழியர்களுக்கான கல்லூரியில் நடக்க இருந்த ஒரு நிகழ்வுக்காக பிபின் ராவத் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.
பிபின் ராவத் பயணித்த IAF Mi-17V5 ஹெலிகொப்டர் விமானம் விபத்துக்குள்ளானதை இந்திய விமானப் படை இன்று மதியம் உறுதி செய்தது. அவர் உயிரிழந்த செய்தி மாலை 6 மணியளவில் அறிவிக்கப்பட்டது.
விமானம் விழுந்து நொறுங்கிய இடம் வெலிங்டனில் இருந்து சுமார் 3.85 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
பிபின் ராவத் மற்றும் பிறரின் மரணத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஹெலிகொப்டர் விபத்து பற்றி நாடாளுமன்றத்தில் நாளை அரசு அறிக்கை அளிக்க இருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் டெல்லி இல்லத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றார். சில நிமிடங்களில் அவர் அங்கிருந்து கிளம்பினார். அவர் சென்று திரும்பிய சுமார் ஒரு மணி நேரம் கழித்து பிபின் ராவத்தின் மரணச் செய்தி வெளியானது
இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் யார்?
ஜெனரல் பிபின் ராவத், சிம்லாவில் உள்ள செயிண்ட் எட்வார்ட் பள்ளியில் படித்தார். பின்னர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் படித்தார். அவர் 1978ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையத்தில் உள்ள பதினோராவது கூர்கா ரைஃபிள்ஸ் பிரிவின் ஐந்தாவது படையணியில் சேர்ந்தார்.
டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையத்தில் இந்திய ராணுவ இயக்குநரகத்தின் தலைமை அதிகாரி உட்பட பயிற்சி அளிக்கும் பொறுப்பை அவர் வகித்தார். மத்திய பிராந்தியத்தில் தளவாடங்கள் பிரிவு அலுவலராக அவர் பணியாற்றினார்.
ராணுவ செயலர் பிரிவில், துணை ராணுவ செயலாளர் மற்றும் கர்னல் அந்தஸ்தில் ராணுவ செயலாளராக பிபின் ராவத் பணியாற்றினார்.
வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு கல்லூரியிலும் பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சி பெற்றார்.
அமெரிக்காவின் ஃபோர்ட்லீவன்வொர்த்தில் உள்ள ராணுவ தளபதிகளுக்கான பயிற்சி வகுப்புகளிலும் பிபின் ராவத் பங்கெடுத்துள்ளார்.
ஜெனரல் பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு மற்றும் தலைமைப்பண்பு குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். அது பல பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது.
சென்னை பல்கலைகழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் அவருக்கு எம்.ஃபில் பட்டம் வழங்கப்பட்டது. மேலாண்மை மற்றும் கணிணி அறிவியலில் பட்டயப்படிப்பை முடித்துள்ளார்.
ராணுவ தலைமை தளபதியாக 2016, டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.
No comments:
Post a Comment