கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் மோட்டார் குண்டொன்றை வெட்ட முயற்சி செய்த நிலையில், அது வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் இன்று (05) பிற்பகல் 3.30 மணியளவில் பாழடைந்த காணியொன்றில் கண்டெடுத்த மர்மப் பொருளை கிரைண்டர் ஒன்றினால் வெட்டியபோது குறித்த பொருள் வெடித்ததில் 25 வயது நபரான சிவலிங்கம் யுவராஜ் எனும் திருமணமான நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் இடம்பெறும்போது அவருடன் இருந்த அவரது இளைய சகோதரரான 13 வயதுடைய சிவலிங்கம் நிலக்சன் எனும் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டை சோதனையிட்டபோது, அதிலுள்ள இரும்பை எடுப்பதற்காக இவ்வாறு வெட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட மேலும் சில மோட்டார் குண்டுகளை மீட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டை சூழவுள்ள வீட்டின் சில பகுதிகளிலும் ஆபத்தான வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
(பரந்தன் குறூப் நிருபர்)
No comments:
Post a Comment