இலங்கையரின் கொடூர கொலைக்கு காரணமான அனைவருக்கும் தண்டனை : பாகிஸ்தான் பிரதமர் கண்டனம் : இதுவரை 100 இற்கும் அதிகமானோர் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, December 3, 2021

இலங்கையரின் கொடூர கொலைக்கு காரணமான அனைவருக்கும் தண்டனை : பாகிஸ்தான் பிரதமர் கண்டனம் : இதுவரை 100 இற்கும் அதிகமானோர் கைது

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் சியல்கோட்டில், இலங்கை பிரஜை ஒருவரை சித்திரவதை செய்து, கொலை செய்து, அவரது உடலை எரித்துள்ள சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளதோடு, இதற்கு காரணமான அனைவருக்கும் சட்டத்தின் மூலம் தண்டனை வழங்கப்படுமென தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ட்விட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ள அவர், "சியல்கோட்டில் உள்ள தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொடூரமான தாக்குதல் மற்றும் இலங்கை முகாமையாளர் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்ட இன்றைய நாள் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாளாகும். இது தொடர்பான விசாரணைகளை நான் கண்காணித்து வருகிறேன். அத்துடன் இதற்கு காரணமான அனைவரும் முழுமையான சட்டத்தை பிரயோகித்து கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். கைது நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன."
நேற்று (03) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பிரியந்த குமார தியவதன எனும் இலங்கையரே இவ்வாறு கொல்லப்பட்டிருந்தார்.

சியல்கோட்டிலுள்ள வசிராபாத் வீதியில், தனியார் தொழிற்சாலையொன்றின் ஏற்றுமதி முகாமையாளராக பணியாற்றி வந்த ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனது தொழில் நிமித்தம் சியல்கொட்டில் வசித்து வரும் இவர், இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) பற்றியதாக தெரிவிக்கப்படும் சுவரொட்டி ஒன்றை கிழித்து குப்பைத் தொட்டியில் இட்டதால் அங்கிருந்தவர்கள் கோபமுற்று அவரை தாக்கியுள்ளதோடு, அங்கிருந்து தப்பியோடிய அவரை வீதியில் வைத்து தாக்கிய கும்பல் அவரை வீதியில் வைத்து எரித்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வீடியோக்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளதுடன், அந்த வீடியோக்களில் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி தாக்குவதையும் பின்னர் குறித்த நபரின் உடல் தீயில் எரிவதையும் அவதானிக்க கூடியதாகவுள்ளது.

அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய 100 இற்கும் அதிகமானோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதேவேளை, இது தொடர்பில் பாகிஸ்தான் அரசு உரிய விசாரணைகளை மேற்கொள்ளும் என எதிர்ப்பார்ப்பதாக இலங்கையின் வௌிவிவகார அமைச்சு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment