கிளிநொச்சி மக்களின் பொருளாதார வலுவூட்டலுக்கு அமைச்சர் டக்ளஸ் உதவி - பாரம்பரிய தொழில்முறைகளுக்கும் உத்தரவாதம் - News View

Breaking

Sunday, November 21, 2021

கிளிநொச்சி மக்களின் பொருளாதார வலுவூட்டலுக்கு அமைச்சர் டக்ளஸ் உதவி - பாரம்பரிய தொழில்முறைகளுக்கும் உத்தரவாதம்

நாடளாவிய ரீதியில் 2 இலட்சம் சமுர்த்தி பயனாளர்களை தெரிவு செய்து வாழ்வாதாரத்தினை வலுவூட்டும் வேலைத்திட்டத்திற்கு அமைய கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர்கள் மத்தியில் பாசி வளர்ப்பிற்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான காசோலைகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைக்கப்பட்டன.

பூநகரியில் அமைந்துள்ள தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்தில் இன்று (21.11.2021) நடைபெற்ற இந்நிகழ்வில் பாசி வளர்ப்பிற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு முதற்கட்டமாக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில் மீதி 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை இன்னும் சில வாரங்களில் வழங்கப்படவுள்ளது.

இதன்போது பயனாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குறித்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளவர்கள், இதனை சரியான முறையில் பயன்படுத்தி நீட்சியான பொருளாதார நன்மைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் முடிந்தளவு கடலட்டைப் பண்ணைகளை உருவாக்கி கடற்றொழிலாளர்களுக்கு நிலையான பொருளாதாரக் கட்டமைப்பினை உருவாக்குவதற்கான வேலைத்திட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், கடலட்டை பண்ணை அமைப்பதற்கு பொருத்தமான இடங்களைத் தெரிவு செய்து அடையாளமிடும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த செயற்பாடு, பாரம்பரிய தொழில் முறைகளில் ஈடுபடுகின்வர்களுக்கு எதிர்காலத்தில் அச்சுறுத்லை ஏற்படுத்தப் போகின்றது என்ற கருத்து சில விஷமிகளினால் பரப்பப்பட்டு வருகின்றது

இந்நிலையில், இன்று பூநகரிப் பிரதேச கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கலட்டைப் பண்ணைகள் மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எந்தவொரு பாரம்பரிய தொழில் முறைகளையும் பாதிக்கும் வகையில் கடலட்டைப் பண்ணைகள் உருவாக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்ததுடன், குறுகிய நோக்கங்களுடனும் மக்களின் பிரச்சினைகள் தீராப் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களினாலும் வெளியிடப்படும் கருத்துக்களை கவனத்தில் எடுக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment