(எம்.மனோசித்ரா)
மீன்பிடித்துறையில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையிலான ஒத்துழைப்பிற்கான வாய்ப்புக்கள் குறித்து இந்தியா அவதானம் செலுத்தியுள்ளதோடு, மீன்பிடியில் ஈடுபடும்போது மீனவர்களின் பாதுகாப்பு முக்கியத்துவம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது இந்திய மீன்பிடித்துறை அமைச்சர் உள்ளிட்ட துறையுடன் தொடர்புடைய முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, கடந்த ஞாயிறன்று இராமேஸ்வரத்தில் பல்வேறு மீனவர் அமைப்புக்களின் பிரதிநிதிகளைச்சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போதே மீன்பிடியில் ஈடுபடும்போது மீனவர்களின் பாதுகாப்பு முக்கியமானதென அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மீன்பிடித்துறை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணனுடனான சந்திப்பின் போதே உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, மீன்பிடித்துறையில் இந்தியா - இலங்கை இடையிலான ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்கள் குறித்து ஆராய்ந்தார். அத்துடன் இந்திய மீனவர்களின் நல்வாழ்வு தொடர்பான விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த உயர் ஸ்தானிகர், இந்திய மீனவர்களின் நல்வாழ்வு மற்றும் மக்களுக்கிடையிலான உறவுகளை வலுவாக்குதல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
இவ்விஜயத்தின் ஏனைய நிகழ்வுகளாக தமிழக ஆளுனர் என்.ரவி, தமிழக நிதி அமைச்சர் பழனிவேல், தமிழக அரசின் சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் உள்ளிட்டோரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
வரலாற்று ரீதியான சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பல்வேறு நவீன மீன்பிடி முறைமைகள் ஆகியவற்றின் தற்போதைய நிலையை கண்டறிவதற்காக உயர்ஸ்தானிகர் இந்திய இராஜதந்திரிகளுடன் தனுஷ்கோடி, அரிச்சல்முனை,குந்துகால் மீன்பிடித் துறைமுகங்களுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment