மீண்டுமொரு பாரிய கொவிட் அலைக்கும், முடக்கத்திற்கும் தயாராக வேண்டும் : மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற மக்கள் ஆர்வம் காட்டவில்லை - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

Breaking

Tuesday, November 23, 2021

மீண்டுமொரு பாரிய கொவிட் அலைக்கும், முடக்கத்திற்கும் தயாராக வேண்டும் : மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற மக்கள் ஆர்வம் காட்டவில்லை - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(எம்.மனோசித்ரா)

நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது கொத்தணிகளாகவும் உப கொத்தணிகளாகவும் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமையே இதற்கான காரணமாகும். சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை எனில் மீண்டுமொரு பாரிய அலைக்கும், முடக்கத்திற்கும் செல்ல வேண்டியேற்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை தொடர்பில் வினவிய போது இதனைத்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து கொவிட் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. ஒரு வார காலத்திற்குள் தொற்றாளர்கள் எண்ணிக்கை 30 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. இது பாரியதொரு அதிகரிப்பாகும். 

500 ஆகக் காணப்பட்ட நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை தற்போது 700 வரை உயர்வடைந்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நாளாந்தம் சுமார் 10 - 12 மரணங்களே பதிவாகின. எனினும் தற்போது 20 இற்கும் அதிகமான மரணங்கள் பதிவாகின்றன.

அத்தோடு கொத்தணிகளாகவும், உப கொத்தணிகளாகவும் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். உற்சவங்களில் பங்குபற்றியவர்கள், பாடசாலை மாணவர்கள் என தொற்றாளர்கள் இவ்வாறு உப கொத்தணிகளாக இனங்காணப்படுகின்றனர். இவ்வாறான உப கொத்தணிகளே பாரியதொரு அலையாக விசாலமடையும்.

இந்நிலையில் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் முதலாம், இரண்டாம் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதில் காண்பித்த ஆர்வத்தினை மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் காண்பிக்கவில்லை. இது தவறானதொரு விடயமாகும். எவ்வித தயக்கமும் இன்றி மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு மக்களை அறிவுறுத்துகின்றோம்.

காரணம் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதன் மூலமாகவே உயிர் பாதுகாப்பினை உறுதி செய்ய முடியும். எவ்வாறிருப்பினும் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளமைக்காக சுகாதார விதிமுறைகளை விளையாட்டாகக் கருதி அசமந்த போக்குடன் செயற்படக் கூடாது.

தடுப்பூசியின் மூலம் மரணத்திலிருந்து பாதுகாப்பு பெற முடியுமே தவிர தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற முடியாது. சகல பிரஜைகளும் தொற்று ஏற்படுவதிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறில்லை எனில் மீண்டுமொரு பாரிய அலைக்கும் , முடக்கத்திற்கும் செல்ல வேண்டியேற்படும் என்றார்.

No comments:

Post a Comment