தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணையாவிட்டாலும், பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் - ஷாந்த பண்டார - News View

About Us

About Us

Breaking

Sunday, November 14, 2021

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணையாவிட்டாலும், பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் - ஷாந்த பண்டார

ஆர்.யசி

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் நலன்களில் பங்களிப்பு செலுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் பேச்சுவர்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற ரீதியில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தான் அழைப்பு விடுப்பதாக தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஷாந்த பண்டார, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பை நிராகரிக்க மாட்டார் எனவும் கூறினார்.

அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயங்களை சபையில் முன்வைத்தார்.

அவர் மேலும் கூறுகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு நாட்டுக்கு அவசியமான பல நல்ல விடயங்களை கூறுகின்றனர், ஆனால் அவர்கள் தமிழ் மக்களின் நலன்களில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பை நிராகரிக்க மாட்டார். இன்று, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் எம்.பி, சுரேன் ராகவன் எம்.பி ஆகியோர் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அங்கத்துவத்தை பெற்றுக் கொள்ளவோ அல்லது அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இணையவோ நாம் வலியுறுத்தவில்லை. நீங்கள் அரசாங்கத்தில் இணையாவிட்டாலும் பரவாயில்லை, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.

அதேபோல் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள். அதற்காக கூட்டமைப்பும் அரசாங்கத்துடன் இணைய வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் மக்களின் நலன்களில் அரசாங்கத்துடன் பேசி தீர்வு காணலாம்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரினால் தான் இன்று தமிழ் மக்களும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய நீங்களும் நிம்மதியாக வாழ்கின்றீர்கள். அதுமட்டுமல்ல, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் தான் வடக்கிற்கும் கிழக்கிற்கும் துரித அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.

தமிழ் மக்களுக்கு அதிக சலுகைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன. அவற்றை மறந்துவிட வேண்டாம். எனவே பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment