சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையில் மின்சார சபை பொறியியலாளர்கள் : முதற் கட்டத்தில் மாத்திரம் அவசர திருத்த வேலைகள் சீர் செய்யப்படும் : அசௌகரியங்களுக்கு அரசாங்கமும், உரிய அமைச்சருமே பொறுப்பு - News View

Breaking

Thursday, November 25, 2021

சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையில் மின்சார சபை பொறியியலாளர்கள் : முதற் கட்டத்தில் மாத்திரம் அவசர திருத்த வேலைகள் சீர் செய்யப்படும் : அசௌகரியங்களுக்கு அரசாங்கமும், உரிய அமைச்சருமே பொறுப்பு

இன்று (25) நண்பகல் 12.00 மணி முதல் சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

யுகதனவி அனல் மின் நிலைய ஒப்பந்தம் (New Fortress) உள்ளிட்ட 6 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக, சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மின்சார சபையின் பொறியியலாளர் சங்க அறிவித்துள்ளது.

அதற்கமைய, அலுவலக நேரத்திற்கு (8.30 - 4.30) வெளியே நாட்டில் ஏற்படும் அவசர திருத்த வேலைகள், அவசர மின் துண்டிப்புகளை சீர் செய்யும் நடவடிக்கைகள் முதற் கட்ட தொழிற்சங்க நடவடிக்கையின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படுமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு, அரசாங்கமும், உரிய அமைச்சுமே பொறுப்பு என அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

இ.மி.ச. தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள்
1. முறையற்ற மற்றும் சட்டவிரோதமான நியூபோட்ரஸ் (New Fortress) LNG கொடுக்கல் வாங்கலை முன்னெடுக்காதிருத்தல்

2. தற்போது முன்னெடுக்கப்படும் LNG விலைமனு கோரல் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லல்

3. மின்சார சபையை பகுதிகளாக பிரிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்

4. 1969 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மின்சார சபை சட்டத்தின் திருத்தங்களை இடை நிறுத்தல்

5. பொதுமுகாமையாளர் பதவி அரசியல்மயமாக்கப்படுவதை தடுத்தல்

6. சிரேஷ்ட முகாமையாளர்களை இடமாற்றம் செய்வதை இடைநிறுத்தல்

அமைச்சரவை ஏற்கனவே நியமித்துள்ள, கொள்முதல் குழுக்கள், தொழில்நுட்ப குழுக்கள், செயற்றிட்டக் குழுக்கள் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் இணக்கப்பாட்டுக்கு வரும் குழுக்கள், விலைமனு திறப்பதற்கான குழுக்கள் ஆகியவற்றிலிருந்தும் விலகுவதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்டும் காலத்தில் மின்சார சபையின் தலைவருடன் ஒத்துழையாமை நடவடிக்கையை கையாளவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வுகள் கிடைக்காவிடின் இந்த சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையை அடுத்த கட்டத்தை நோக்கி கொண்டு செல்லவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அடுத்த கட்ட தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்லும்போது, திடீர் மின் துண்டிப்பு உள்ளிட்ட அவசர சந்தர்ப்பங்களின் போதும் கடமையில் இருந்து விலக நேரிடலாம் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment