ராஜபக்ஷவினரின் காலடியில் விழுந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்ற தேவை எமக்கு ஒருபோதும் இல்லை : தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பதிலடி - News View

About Us

About Us

Breaking

Sunday, November 14, 2021

ராஜபக்ஷவினரின் காலடியில் விழுந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்ற தேவை எமக்கு ஒருபோதும் இல்லை : தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பதிலடி

ஆர்.யசி

தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைகளை தீர்க்கவும், சுய உரிமையையும், கௌரவத்தையும், சுயாட்சியையும் உறுதிப்படுத்தும் இதய சுத்தியுடனான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என்றால் அவ்வாறான பேச்சுவார்த்தைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போதுமே தயாராக உள்ளது, ஆனால் தமிழ் மக்களின் சுய கௌரவத்தையும், உரிமைகளையும் விற்று, அரசாங்கத்தின் காலடியில் விழுந்து ராஜபக்ஷவினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற தேவை எமக்கு ஒருபோதும் இல்லை. அதற்கு நாம் தயாராகவும் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.

சனிக்கிழமை (13) அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார, தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

தனது உரையில் அவர் கூறுகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு நாட்டுக்கு அவசியமான பல நல்ல விடயங்களை கூறுகின்றனர், ஆனால் அவர்கள் தமிழ் மக்களின் நலன்களில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பை நிராகரிக்க மாட்டார்.

இன்று, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் எம்.பி, சுரேன் ராகவன் எம்.பி ஆகியோர் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருகின்றனர்.




தமிழ் தேசிய கூட்டமைப்பை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ளவோ அல்லது அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இணையவோ நாம் வலியுறுத்தவில்லை.

நீங்கள் அரசாங்கத்தில் இணையா விட்டாலும் பரவாயில்லை, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும். எனவே பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து தமது நிலைப்பாட்டை முன்வைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் கூறுகையில், தமிழ் மக்களின் நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொள்ளவும், நீண்டகால அரசியல் நெருக்கடிகள், உரிமை மீறல்கள் என்பவற்றிற்கு ஒரு தீர்வு கிடைக்கவும், சுய கௌரவத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும், வடக்கு கிழக்கிற்கான அபிவிருத்திகளை துரிதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் தொடர்ச்சியாக சகல தரப்புடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம். அழுத்தம் கொடுக்க வேண்டிய இடங்களில் அதனையும் செய்து வருகின்றோம்.

அதேபோல், நாங்கள் இப்போதும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவே உள்ளோம். ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் பேச மாட்டோம் என நாம் ஒருபோதும் கூறவில்லை. தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் அவருடன் நாம் 13 தடவைகள் பேச்சுவர்த்தை நடத்தியுள்ளோம். ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. வெறுமென கண்துடைப்பு பேச்சுவார்த்தைகளாகவே இவை அமைந்தன.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், பொறுப்புக் கூறல் விடயங்களில் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சர்வதேசம் அழுத்தம் கொடுத்த நிலையில், அரசாங்கத்தை பொறுப்புக் கூறலுக்குள் தள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பாக நாம் எடுத்த நகர்வுகளில் எம்மை சமாளிக்கும் விதமாக இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

இப்போது ராஜபக்ஷவினரின் அரசாங்கத்தில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, அங்கஜன் போன்றவர்கள் அங்கம் வகிப்பது மற்றும் பதவிகளை வகிப்பது குறித்தும் நாம் விமர்சிக்கவில்லை. ஆனால் தமிழ் மக்களின் சுய கௌரவத்தையும், உரிமைகளையும் விற்று, அரசாங்கத்தின் காலடியில் விழுந்து ராஜபக்ஷவினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற தேவை எமக்கு ஒருபோதும் இல்லை.

எம்மை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள், முதலில் எமது பிரச்சினை என்ன, எமக்கு அநீதி இழைக்கப்பட்டமை குறித்தும் முழுத் தெளிவுடன் கருத்துக்களை முன்வைக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment