(இராஜதுரை ஹஷான்)
விவசாய நடவடிக்கையில் சேதனப் பசளை செயற்திட்டம் ஒரு ஒத்திகையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் இம்முறை தோல்வியடைந்தால் அடுத்த முறை கலப்பு பசளை முறைமையில் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என காணி விவகார அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
அநுராதபுரம் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பெரும்போக விவசாயத்திற்கு தேவையான சேதனப் பசளை விவசாயிகளுகளுக்கு முழுமையாக விநியோகிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விவசாயிகள் என குறிப்பிட்டுக் கொள்பவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பது பல விடயங்கள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு ஒத்திகையாகவே சேதனப் பசளை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை சேதனப் பசளை தோல்வியடைந்தால் அடுத்த முறை சேதனப் பசளை மற்றும் இரசாயனப் பசளையை இணைத்து கலப்பு முறைமையில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
தேசிய மட்டத்தில் சேதனப் பசளையை உற்பத்தி செய்யும் முயற்சியாளர்கள் அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் அதிகளவில் உள்ளார்கள். விவசாயிகளுக்கு மேலதிகமாக வருமானம் ஈட்டித்தரும் ஒரு முறையாக சேதனப் பசளை உற்பத்தி காணப்படுகிறது.
தேர்தல் வெற்றியை கருத்திற் கொண்டு ஜனாதிபதி சேதனப் பசளை திட்டத்தை அறிமுகப்படுத்தவில்லை. அத்திட்டம் சவால்மிக்கது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இரசாயன உரப் பாவனையினால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து விவசாயிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
குறுகிய கால பயனுக்காக எதிர்காலத்தை வீண்விரயமாக்கக் கூடாது என்ற சிறந்த நோக்கில் ஜனாதிபதி சேதனப் பசளைத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். ஆகவே அத்திட்டத்திற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
சேதனப் பசளை ஊடாக விளைச்சல் குறைவடைந்தால் அதற்கான நட்ட ஈடு வழங்குவோம் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவது பிறிதொரு தரப்பினரது அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது என்றார்.
No comments:
Post a Comment