(எம்.எப்.எம்.பஸீர்)
'முஜாஹித்தீன் போ அல்லாஹ்' (mujahideen for allah) எனும் பெயரிலான வட்ஸ்அப் குழுமம் ஒன்றூடாக ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதிகளின் செயற்பாடுகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவன் சஹ்ரான் ஹாசிமின் போதனைகளுடன் தொடர்புபட்டதாக கூறப்படும் 702 இலங்கை தொலைபேசி இலக்கங்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்திய தேசிய உளவுத்துறை அந்நாட்டில் கைது செய்த ஐ.எஸ். ஐ.எஸ். சந்தேகநபரின் தொலைபேசியிலிருந்து பெற்றுக் கொண்ட தகவல்களுக்கு அமைய, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் ஊடாக அளித்த தகவல் பரிமாற்றத்தினை மையப்படுத்தி, பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவால் இது தொடர்பில் விசாரிக்கும் பொறுப்பு சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினருக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இது தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெறுவதாக குறித்த விசாரணைப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் தங்கல்ல ஊடாக, கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகேவுக்கு அறிக்கை ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பீ.58780/21 எனும் இலக்கத்தின் கீழான வழக்குக் கோவை ஊடாக நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய, இந்த விசாரணைகளில் 072 எனும் இலக்கத்துடன் ஆரம்பிக்கும் தொலைபேசி இலக்கம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் அடையாளம் கணப்பட்டுள்ளார்.
ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் இஸ்ஸதீன் மொஹம்மட் பவ்சான் என்பவரை கடந்த 2020 டிசம்பர் 16 ஆம் திகதி விசாரணையாளர்கள் கைது செய்து தற்போதும் தடுப்புக் கவலில் அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு அமைய, ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை பேணியமை, அடிப்படைவாதத்தை பரப்பியமை, சமூக வலைத்தளங்கள் ஊடாக பயங்கரவாத அடிப்படைவாத சிந்தனைகளை பரப்பியமை உள்ளிட்ட குற்றச் சாட்டுக்களின் கீழ் இந்த விசாரணைகள் இடம்பெறுவதாக கூறப்பட்டுள்ளது.
அதன்படி 'முஜாஹிதீன் போ அல்லாஹ்' எனும் வட்ஸ்அப் குழு ஒன்றில், ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சிந்தனைகள் அடங்கிய காணொளிகள், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரி தேசிய தெளஹீத் ஜமாஅத் தலைவன் சஹ்ரான் ஹாசிமின் போதனை காணொளிகளை பகிர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்திய தேசிய உளவுத்துறையினர் அந்நாட்டில், எஸ். சம்சுதீன் எனும் நபர் ஒருவரை பயங்கரவாத குற்றச் சாட்டில் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ள கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய இந்த வட்ஸ்அப் குழு தொடர்பில் தெரியவந்துள்ளது.
இந்நிலையிலேயே அந்த வட்ஸ்அப் குழு மற்றும் சந்தேகநபருடன் தொடர்புடைய 702 இலங்கை தொலைபேசி இலக்கங்கள், அதன் உரிமையாளர்கள் தொடர்பில் விசாரணை செய்யுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடாக இலங்கைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்தே இவ்விசாரணைகள் பொலிஸ்மா அதிபரால் தமக்கு கையளிக்கப்பட்டதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அது தொடர்பிலான விசாரணைகளில் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த நபர், உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களை நடத்தியோர், அது சார்ந்த சந்தேகநபர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தாரா என்பது தொடர்பிலும் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சி.ரி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளனர்.
அதன்படி அது தொடர்பில் பூரண விசாரணைகளை முன்னெடுத்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே, சி.ரி.ஐ.டி.யினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment