ஒரு நாடு ஒரு சட்டம் செயலணி முஸ்லிம் மக்களை பழிவாங்க மேற்கொள்ளும் நடவடிக்கை - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் - News View

Breaking

Tuesday, November 23, 2021

ஒரு நாடு ஒரு சட்டம் செயலணி முஸ்லிம் மக்களை பழிவாங்க மேற்கொள்ளும் நடவடிக்கை - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

1956 இல் மொழி சட்டத்தை கொண்டுவந்து தமிழ் மக்களின் உரிமையை இல்லாமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுபோன்று, ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பான செயலணியின் மூலம் முஸ்லிம் மக்களை பழிவாங்க மேற்கொள்ளும் நடவடிக்கையாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமரின் அமைச்சுக்களின் செலவினத் தலைப்புக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஒரு நாடு சட்டம் தொடர்பான ஆணைக்குழு நியமனம் தொடர்பாக நாட்டுக்குள் பாரியதொரு குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது. இதன் உண்மைத் தன்மை என்ன?. என்பது தொடர்பில் தேடிப்பார்க்க வேண்டும்.

இந்த நடவடிக்கையும் 1956 இல் ஏற்படுத்தப்பட்ட சிங்களம் மட்டும் அரச கரும மொழியால் நாட்டில் ஏற்பட்ட குழப்பமான நிலையை போன்றதொரு நிலைமைக்கான வழியை ஏற்படுத்துகின்றதோ என்ற சந்தேகம் எழுகின்றது.

1956 இல் ஆங்கில மொழியை கட்டிப்பிடித்துக் கொண்டு தமிழ் மக்களின் மொழி உரிமையை இல்லாமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதேபோன்றே தற்போது முஸ்லிம் மக்களை இலக்குவைத்து ஒரு நாடு ஒருசட்டம் என்ற செயலணியின் பின்னால் இருந்து மேற்கொள்ளப்போகும் உண்மை நோக்கம் என்ன?

சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுக்கமையவே இந்த செயலணி அமைக்கப்பட்டிருக்கின்றது என சிலர் விளங்கிக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு இல்லை. சட்டத்தில் சமம் இல்லை என்ற மோசமான கருத்தை முன்னிலைப்படுத்தியே இதனை செய்யப்போகின்றது என்றே நாங்கள் காண்கின்றோம்.

நாட்டில் அனைவருக்கும் சமமான சட்ட அதிகாரம் இருக்க வேண்டும் என்பதை யாரும் ஏற்றுக் கொள்கின்றனர். அவ்வாறான சட்ட கட்டமைப்பொன்று இல்லாமலா நாங்கள் வாழ்கின்றோம்.

நாட்டின் அரசியலமைப்பில் சமத்துவம், நீதிமன்ற சுயாதீனம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஒவ்வொரு பிரஜையும் சமமானவர்கள் என அரசியலமைப்பு தெரிவிக்கின்றது.

அப்படியாயின் ஒரு நாடு ஒருட்டத்தின் நோக்கம் என்ன? அதேபோன்று எமது தண்டனைச் சட்டத்தில் அதிகமான சட்டங்கள் வெளிநாட்டு சட்டங்களுடன் தொடர்புபட்டே இருக்கின்றன.

எனவே ஒரு சமூகத்தின் தனியார் சட்டம் தொடர்பாக இருக்கும் பலதரப்பட்ட பிரச்சினைகள் அடிப்படையாக் கொண்டு மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை, விரிசலை ஏற்படுத்தி, அதன் மூலம் அந்த உரிமைகளை இல்லாமலாக்க எடுக்கும் முயற்சியால், வைராக்கியம் குரோதத்தை வளர்க்கும் தேரர் ஒருவரை குறித்த செயலணிக்கு தலைவராக்கி, மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கையால் மீண்டுமொருமுறை 1956 இல் ஏற்படுத்தியதுபோன்று முஸ்லிம் மக்களை பழிவாங்க மேற்கொள்ளும் நடவடிக்கையாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம்.

No comments:

Post a Comment