60 சட்டங்களை நீதியமைச்சர் இரண்டு வருடங்களில் திருத்தியமைத்துள்ளார் : மக்கள் கட்சி நிற பேதமின்றி நியாயத்துக்காக செல்லக்கூடிய ஒரே இடம் நீதிமன்றம் - அமைச்சர் டளஸ் அழகப்பெரும - News View

About Us

About Us

Breaking

Monday, November 1, 2021

60 சட்டங்களை நீதியமைச்சர் இரண்டு வருடங்களில் திருத்தியமைத்துள்ளார் : மக்கள் கட்சி நிற பேதமின்றி நியாயத்துக்காக செல்லக்கூடிய ஒரே இடம் நீதிமன்றம் - அமைச்சர் டளஸ் அழகப்பெரும

பல தசாப்தங்களாக திருத்தப்படாத 60 புதிய சட்டத் திருத்தங்களை, நீதியமைச்சர் இரண்டு வருடங்களில் திருத்தியமைத்துள்ளார் என ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். 

அவர் இதனை ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்துக்கு அமைய அமைக்கப்பட்ட மாத்தறை புதிய நீதிமன்ற தொகுதி மற்றும் வலஸ்முல்ல புதிய மாவட்ட மாஜிதிஸ்ரேட் நீதிமன்ற கட்டட திறப்பு விழாவின் போதே தெரிவித்தார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ புதிய தொழில்நுட்பத்தினூடாக இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஊடக அமைச்சர் டலஸ் அளகப்பெரும, பாதிப்புக்குள்ளான மக்களுக்கு கட்சி நிற பேதமின்றி நியாயத்துக்காக செல்லக்கூடிய ஒரே இடம் நீதிமன்றம் என்பதால் எமது அனைவரினதும் இறுதி இலக்காக அவர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்வதாகவே இருக்க வேண்டும். அதற்காக நீதிமன்றத்தின் சுதந்திரம் மற்றும் அதன் பெருமையை வலுப்படுத்த வேண்டியுள்ளது. 

அத்தோடு சட்ட ஆதிக்கத்துடன் நீதிமன்ற சுதந்திரம் உருவாக்கப்பட வேண்டும். சட்ட ஆதிக்கம் பாதுகாக்கப்படா விட்டால் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது போகும் எனவும் தெரிவித்தார். 

நாட்டின் அபிவிருத்திக்காக அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது போன்று நீதி நிர்வாகத்தை உருவாக்குவது அபிவிருத்தி அடைந்து வரும் நாடாக முன்னோக்கிச் செல்வதற்கு பெரும் உதவியாக இருக்குமெனவும் கூறினார். அவ்வாறு செயல்பட்ட நாடுகளே முன்னேற்றமடைந்துள்ளன. 

2019ம் ஆண்டு முடிவில் இரண்டு இலட்சம் வழக்குகள் வரை நீதிமன்றங்களில் காணப்பட்டன. ஆனால் அவற்றை தீர்க்க 335 பேரளவிலேயே நீதிபதிகள் காணப்படுகிறார்கள். அதனால் உயர் நீதிமன்றம் தொடக்கம் அனைத்து நீதிமன்றங்களிலும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து வழக்குகளை விரைவாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த வருட வரவு செலவு திட்டத்தில் நீதிமன்ற தொகுதிகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் சட்ட சீர்திருத்தத்தை மேற்கொள்ளவும் 20 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. மாத்தறை புதிய நீதிமன்ற தொகுதிக்கு 1286.5 மில்லியனும், வலஸ்முல்ல புதிய நீதிமன்ற தொகுதியை அமைக்க 66.7 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வெலிகம நிருபர்

No comments:

Post a Comment