ஒரு வாரத்தில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 35 சத வீதத்தினால் அதிகரிப்பு : மக்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகளினால் நாளாந்தம் அதிகரித்த போக்கினையே காண்பிக்கிறது : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

Breaking

Sunday, November 21, 2021

ஒரு வாரத்தில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 35 சத வீதத்தினால் அதிகரிப்பு : மக்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகளினால் நாளாந்தம் அதிகரித்த போக்கினையே காண்பிக்கிறது : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த இரு வாரங்களில் கொவிட் நிலைமையை ஒப்பிட்டு மதிப்பீடு செய்யும் போது தொற்றாளர் எண்ணிக்கையானது 1.3 மடங்கினால் அதாவது 35 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

தற்போது டெல்டா திரிபின் உப பிறழ்வொன்றும் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான புதிய திரிபுக்கள் இனங்காணப்படும் போது தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பதோடு மாத்திரமின்றி, தொற்றுக்குள் உள்ளாவோர் தீவிர நிலைமையை அடையும் சாத்தியமும் அதிகமாகும் என்றும் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் தற்போதைய கொவிட் நிலைவரம் தொடர்பில் வினவியபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் கொவிட் பரவலில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் மற்றும் மக்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகளினால் தொற்று நாளாந்தம் அதிகரித்த போக்கினையே காண்பிக்கிறது.

கடந்த வாரத்தில் மாத்திரம் 6420 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய வாரத்தில் இனங்காணப்பட்ட தொற்றாளர் எண்ணிக்கை 4728 ஆகும். அதற்கமைய இவற்றை ஒப்பிடும் போது ஒரு வாரத்திற்குள் தொற்றாளர் எண்ணிக்கையானது 1.3 மடங்கினால் அதிகரித்துள்ளது. அதாவது தொற்றாளர் எண்ணிக்கை 35 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையில் மீண்டுமொரு கொவிட் அலை ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் நாம் செயற்பட வேண்டும்.

தற்போது செயலூட்டியாக மூன்றாம் கட்ட தடுப்பூகள் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை உரிய வயதினர் உரிய காலத்தில் பெற்றுக் கொள்வதன் மூலம் தொற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்ள முடியும். தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளும் அதேவேளை சுகாதார விதிமுறைகளையும் பொதுமக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும்.

எனினும் தற்போது திருமண வைபவங்கள் உள்ளிட்டவற்றில் மக்கள் எவ்வித சுகாதார விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை. இவ்வாறு பொதுமக்கள் பொறுப்பற்று செயற்படும் போது தொற்றானது மீண்டும் தீவிரமடையக் கூடிய நிலைமையே ஏற்படும்.

அத்தோடு தற்போது டெல்டா திரிபின் உப பிறழ்வொன்றும் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான புதிய திரிபுக்களினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களும் அதிகமாகவே காணப்படும்.

புதிய திரிபுக்கள் இனங்காணப்படும் போது தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பதோடு மாத்திரமின்றி, தொற்றுக்குள் உள்ளாவோர் தீவிர நிலைமையை அடையும் சாத்தியமும் அதிகமாகும். இவ்வாறான நிலைமையைக் கருத்திற் கொண்டு நாட்டிலிருக்கின்ற சகல தரப்பினரும் மிகவும் பாதுகாப்பான வகையில் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

எனவே பொதுமக்கள் சுகாதார விதிகளை மிகவும் இறுக்கமாகக் கடைபிடிக்க வேண்டும். இவற்றை முறையாகப் பேணுவதன் ஊடாக சடுதியான தொற்றாளர் எண்ணிக்கையையும், ஐந்தாவது அலையையும் தடுக்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment