(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக் கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில், கொழும்பு, ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்றில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தை வாபஸ் பெற சட்டமா அதிபர் எடுத்துள்ள தீர்மானத்தை அறிய முன்வைக்கப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட, தனது ஒரே மகனை இழந்துள்ள கொழும்பு - கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த சரோஜா நாகநதன் எனும் தாய் முன்வைத்த தகவல் அறியும் விண்ணப்பமே இவ்வாறு நிராகரிக்கப்படுவதாக சட்டமா அதிபர் சார்பில் தகவல் அதிகாரியாக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ரஜீவ் குணதிலகவால் கையெழுத்திட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 16 ஆம் திகதி, ஆர்.ஐ./22/2021 எனும் பதிவிலக்கத்தின் கீழ் முன் வைக்கப்பட்டுள்ள குறித்த விண்ணப்பத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 5 (1) (ஊ) பிரிவின் கீழான விதிவிதானங்களுக்கு அமைய நிராகரிப்பதாக சட்டமா அதிபர் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறயினும், குறித்த நிராகரிப்பு தொடர்பில் அதிருப்தியடைந்தால், தகவல் அறியும் சட்டத்தின் 31 (1) ஆம் பிரிவின் கீழ், மேன் முறையீட்டுக்காக மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பாரிந்த ரணசிங்கவை 14 நாட்களுக்குள் தொடர்புகொள்ளுமாறு விபரங்களுடன் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment