நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 10, 11, 12, 13 ஆம் வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகளை நவம்பர் 08 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கொவிட் ஒழிப்பு செயலணியின் பரிந்துரைகளை அடுத்து, மேற்படி தரங்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (30) கண்டியில் உள்ள ஶ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் இது தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன,
நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் ஆரம்பக் பிரிவு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் தற்போது உரிய மற்றும் உயர் பங்களிப்புடன் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அந்த வகையில், நவம்பர் 08ஆம் திகதி முதல் தரம் 10, 11, 12, 13 ஆகிய வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கக் கிடைத்தமை பெரும் சாதனையாகும் என்றார்.
சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் பரிந்துரைகளைத் தொடர்ந்து தரம் 6 - 9 வரையிலான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளையும் ஆரம்பிப்பது மற்றும் எஞ்சியுள்ள பாடசாலை காலத்தை நிர்வகிப்பது, விடுபட்ட பாடத்திட்டங்களை முழுமைப்படுத்துவது, பரீட்சைகளை நடாத்துவதற்காக உரிய பிரிவுகளை திட்டமிடுவது மிகவும் முக்கியமானதாகும் என்றார்.
இவற்றை திட்டமிட்டு, எஞ்சியுள்ள பாடசாலை கால எல்லைக்குள் சரியாக செயற்படுவதன் மூலம், 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் க.பொ.த உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான இலக்குகளை அடைய முடியுமென அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலைமையை மீள உருவாக்குவதில் அர்ப்பணித்த, அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் சார்பில் நன்றிகளையும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஶ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல மற்றும் பாராளுமன்ற கல்வி ஆலோசனைக் குழு உறுப்பினர் யதாமினி குணவர்தன உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, எதிர்வரும் நவம்பர் 16 முதல் A/L, O/L பிரத்தியேக வகுப்புகளை 50% கொள்ளளவைப் பேணி நடாத்துவதற்கு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள வழிகாட்டலில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் அது தொடர்பான மேலதிக வழிகாட்டல்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment