சட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்து : அசாத் சாலிக்கு குற்றப்பத்திரம் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, October 25, 2021

சட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்து : அசாத் சாலிக்கு குற்றப்பத்திரம் கையளிப்பு

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 09 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நாட்டின் சட்டம் மற்றும் முஸ்லிம் சட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டதாக தெரிவித்து, கடந்த மார்ச் 16ஆம் திகதி அசாத் சாலி CIDயினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, அப்போதைய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்ததோடு, குறித்த சட்டத்தின் கீழ் அவரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்போது தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு தொடர்ச்சியாக விளக்கமறியல் விதிக்கப்பட்டு வருகிறது.

குறித்த வழக்கு இன்று (25) மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அசாத் சாலி மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 02ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டதுடன், வழக்கு தொடர்பான சாட்சியங்களுக்கு அன்றையதினம் முன்னிலையாகுமாறும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment