டொலர் நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடி துரித தீர்வினைக் காணவும் : மக்கள் பல நாட்கள் வரிசையில் நிற்க வேண்டியேற்பட்டுள்ளது - ருவன் விஜேவர்தன - News View

About Us

About Us

Breaking

Monday, October 4, 2021

டொலர் நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடி துரித தீர்வினைக் காணவும் : மக்கள் பல நாட்கள் வரிசையில் நிற்க வேண்டியேற்பட்டுள்ளது - ருவன் விஜேவர்தன

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது காணப்படுகின்ற டொலர் நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடி துரித தீர்வினைக் காணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அவ்வாறின்றி பொறுத்தமற்ற பொருளாதார முகாமைத்துவத்தின் ஊடாக மக்களை தொடர்ந்தும் நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

கட்சி உறுப்பினர்களுடன் இணைய வழியூடாக நடைபெற்ற கலந்துரையாடலில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மூன்று மாத காலமாக ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு மற்றும் பால்மா தட்டுப்பாட்டுக்கான தீர்வினை வழங்காத இந்த அரசாங்கம், தற்போது சீமெந்து பிரச்சினையையும் மக்கள் மீது சுமத்தியுள்ளது.

சமையல் எரிவாயு மற்றும் பால்மாவிற்காக வரிசையில் நிற்கும் மக்களை தற்போது சீமெந்து வரிசைக்கு தள்ளியுள்ள அரசாங்கம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொள்கிறது. சமையல், எரிவாய, சீமெந்து மற்றும் உரம் என்பவற்றின் தட்டுப்பாட்டுக்கு தீர்வினை அரசாங்கம் வழங்காமையினால் மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

நல்லாட்சியில் மேற்கூறப்பட்ட பொருட்களை நாம் குறைந்த விலையில் மக்களுக்கு விநியோகித்தோம். எனினும் சுபீட்சமான நாட்டை உருவாக்குவதாகக் கூறி மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தை தோல்வியடைச் செய்தனர்.

சுபீட்சத்தின் நோக்கின் பிரதிபலன் இன்று மக்களை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. பால்மா பிரச்சினைக்கான தீர்வினை இன்னும் அரசாங்கத்திற்கு வழங்க முடியாமல் போயுள்ளது. ஒரு பால் பக்கட்டினை கொள்வனவு செய்வதற்கு மக்கள் பல நாட்கள் வரிசையில் நிற்க வேண்டியேற்பட்டுள்ளது. காலையிலேயே பால்மாவிற்காக வரிசையில் நிற்பவர்களுக்கு இறுதியாக பால்மா கிடைக்காமல் போகும் சந்தர்ப்பங்களும் உள்ளன. சமையல் எரிவாயு பிரச்சினையும் இதனைப் போன்றதேயாகும்.

அதேபோன்று 3 மாதங்கள் ஆகியுள்ள போதிலும் லாப் சமையல் எரிவாயு சிலிண்டைரைப் பெற்றுக் கொள்ள முடியாமலுள்ளது. இதன் விலை 383 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், அந்த விலை அதிகரிப்பு போதாது எனத் தெரிவித்து லாப் சமையல் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப்படாமலுள்ளது.

மொட்டு ஆட்சியில் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்கு வியாபாரிகளுக்கு வாய்ப்பளிக்கப்பட மாட்டாது என்று கூறிய அரசாங்கம் தற்போது செயற்பட்டுக் கொண்டிருப்பது முழுமையாக வியாபாரிகளுக்கு சார்பாகவேயாகும்.

டொலர் நெருக்கடியின் காரணமாக பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பல துறைமுகத்தில் தேங்கியுள்ளன. வங்கிகளில் டொலர் இன்மையால் அத்தியாவசிய பொருட்களை விடுவித்துக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். டொலர் பெறுமதி அதிகரித்துள்ளமையே இதற்கான காரணம் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு தீர்க்க முடியாமலுள்ளது.

பால்மாவிற்கான விலையை 200 ரூபாவால் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மறுபுறம் விலை அதிகரிப்பை காலம் தாழ்த்துகிறது. இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் பால்மா விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. தற்போது ஒரு கிலோ கிராம பால்மாவின் விலை 945 ரூபாவாகும். விலை அதிகரிப்பின் பின்னர் ஒரு கிலோ பால்மாவின் விலை 1,145 ரூபாவாக அதிகரிக்கப்படும்.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ள போதிலும், தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. இவ்வாறான சூழலில் மக்களால் எவ்வாறு வாழ முடியும் ? சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு சமையல் எரிவாயு நிறுவனத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர். உலக சந்தையில் தற்போதுள்ள நிலைமைக்கமைய 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 2,800 ரூபாவாகும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வதற்கு அரசாங்கத்திடம் எந்தவொரு வேலைத்திட்டமும் இல்லை. தான் நினைப்பதைப் போன்று அரசாங்கம் செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறது. நல்லாட்சி அரசாங்கத்தை தோல்வியடையச் செய்ததை எண்ணி மக்கள் இன்று கவலையடைகின்றனர். நல்லாட்சி அரசாங்கத்தில் மக்கள் சிறப்பாக வாழ்ந்தனர். நுகர்வோர் மாத்திரமின்றி விவசாயிகளையும் இந்த அரசாங்கம் வரிசையில் நிற்க செய்துள்ளது.

விவசாயிகளைப் போலவே தேயிலை தொழிலாளர்களையும் உரத்திற்காக அரசாங்கம் வரிசையில் நிற்கச் செய்துள்ளது. இரசாயன உரம் இன்மையின் காரணமாக தேயிலை உற்பத்தி 40 வீதமாகக் குறைவடைந்துள்ளது.

இதேபோன்று நெல் உற்பத்தியும் குறைவடைந்துள்ளது. தற்போது நெல்லுக்கான விலையை ஆலை உரிமையாளர்களே தீர்மானிக்கின்றனர். இதனால் ஆலை உரிமையாளர்களே அதிக இலாபம் ஈட்டுகின்றனர். இது தற்போது அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் மாபியாவாகும்.

சேதன உரம் என்று கூறி சீன கழிவுகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறது. தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. மக்களும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தை நாடி டொலர் நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு நாம் வலியுறுத்துகின்றோம். நெருக்கடிக்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களின பெரும்பாலானவர்கள் மொட்டுக்கு வாக்களித்தவர்களாவர். எனவே இந்த பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வினை வழங்குமாறு அரசாங்கத்தினை வலியுறுத்துகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment