கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் அதானி குழுமத்தின் தலைவர், இந்தியாவின் கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானி உள்ளிட்ட குழுவினர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
பிரத்தியேக இரண்டு விமானங்களில் அவர்கள் நேற்றிரவு நாட்டை வந்தடைந்தனர்.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத் திட்டத்தை உருவாக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
கொழும்பு மற்றும் புதுடில்லியில் உள்ள அதிகாரப்பூர்வ வட்டாரங்களை மேற்கொள்காட்டி இந்த தகவலை 'தி இந்து' தெரிவித்துள்ளது.
"இது ஒரு தனிப்பட்ட விஜயம் மற்றும் மேற்கு கொள்கலன் முனையத் திட்டம் பற்றி விவாதிக்க திரு. அதானி ஜனாதிபதியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தி இந்துவிடம் உறுதிபடுத்தியுள்ளார்.
அதேநேரம் இலங்கை வந்துள்ள அதானி, நாட்டின் உயர்மட்ட பிரமுகர்களுடனான சந்திப்புகளையும் மேற்கொள்ளவுள்ளார்.
அதானி குழுமம் ஒரு மெய்நிகர் விழாவில், அதன் இலங்கைப் பங்காளியான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை (SLPA) ஆகியவற்றுடன் ஒரு ஒப்பந்தத்தில் (BOT) கையெழுத்திட்ட ஒரு மாதத்திற்குள் அதானியின் விஜயம் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment