பழிவாங்கல்கள், அடக்கு முறைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக முடிவிற்கு கொண்டு வர வேண்டும் : ஒன்று கூடுவதற்கும், கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குமான சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் - வலியுறுத்தியுள்ள சர்வதேச மனித உரிமை அமைப்புகள் - News View

Breaking

Friday, October 1, 2021

பழிவாங்கல்கள், அடக்கு முறைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக முடிவிற்கு கொண்டு வர வேண்டும் : ஒன்று கூடுவதற்கும், கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குமான சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் - வலியுறுத்தியுள்ள சர்வதேச மனித உரிமை அமைப்புகள்

(நா.தனுஜா)

மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் கல்வி உரிமைக்காகப் போராடும் செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து கட்டவிழ்த்து விடப்படும் பழிவாங்கல்கள் மற்றும் அடக்கு முறைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக முடிவிற்கு கொண்டு வர வேண்டும். பொது வெளியில் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வது உள்ளடங்கலாக அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கும் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குமான சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று 9 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இணைந்து கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

இலங்கையின் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் கல்வி உரிமைக்காகப் போராடும் செயற்பாட்டாளர்கள் மீதான பழிவாங்கல்கள், தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் என்பன முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப் பேரவை, ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, மனித உரிமைகளுக்கான சர்வதேச கூட்டமைப்பு, முன்னரங்க செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பகம், மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள், அமைதி மற்றும் நீதிக்கான இலங்கையின் பிரசாரம், சித்திரவதைகளுக்கு எதிரான பூகோள அமைப்பு ஆகிய 9 அமைப்புக்கள் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, மாணவர் அமைப்புக்களின் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறைசார் நிபுணர்கள் மற்றும் நாட்டில் நடைமுறையிலுள்ள கல்விசார் கொள்கைகளுக்கு எதிராக அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்களை பழிவாங்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

ஆர்ப்பாட்டங்கள், கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை, அமைதி வழியிலான ஒன்றுகூடல்கள் ஆகியவற்றுக்கு தன்னிச்சையான கைது நடவடிக்கைகள், அடக்குமுறைகள் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கவாதிகளின் பணிகளுக்குக் களங்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட போலித்தகவல்கள் ஆகியவற்றையே இலங்கை அரசாங்கம் பதிலாக வழங்கியிருக்கின்றது.

நீண்ட காலமாக இழுபறி நிலையிலிருக்கும் அதிபர், ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினைக்குத் தீர்வை வழங்குதல் மற்றும் இலவசக் கல்விக் கட்டமைப்பு தனியார், இராணுவமயப்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கக் கூடிய ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலம் உடனடியாக நீக்கப்படல் ஆகிய பிரதான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜுலை மாதத்திலிருந்து பல்வேறு தரப்பினராலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

அதன் ஓரங்கமாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைதி வழியிலான போராட்டத்தில் கலந்துகொண்டமைக்காக இலவசக் கல்விக்கான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த கோஷிலா ஹன்சமாலி பெரேரா, தொழிலாளர் போராட்ட நிலையத்தைச் சேர்ந்த சமீர கொஸ்வத்த, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அமில சந்தீப, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் ஹேஷான் ஹர்ஷன மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் உள்ளிட்டோர் இன்னமும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, பொலிஸ் அதிகாரியொருவரின் விரலில் காயத்தை ஏற்படுத்தியமை மற்றும் கொவிட்-19 சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை மீறியமை ஆகியவையே அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களாகும்.

கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் அவர்களின் சுகாதாரப் பாதுகாப்புத் தொடர்பில் நாம் வெகுவாகக் கரிசனையை வெளிப்படுத்துகின்றோம்.

கல்வி உரிமையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் கலந்துகொண்ட மற்றும் ஆதரவை வழங்கிய மேலும் சில செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவதற்கான அச்சுறுத்தலையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டிருக்கின்றார்கள்.

இதே விவகாரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை ஏற்றிச் சென்றமை மற்றும் அவர்களுக்கான ஒலி பெருக்கி வசதிகளை வழங்கியமைக்காக 7 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதுமாத்திரமன்றி மாணவர் ஒன்றியத் தலைவர்கள், பல்கலைக்கழகக் கல்விசார் ஊழியர்கள், தொழிற்சங்கவாதிகள் உள்ளடங்கலாக மேலும் 11 பேரின் பெயர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி தலங்கம பொலிஸாரால் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அவர்களைக் கைது செய்வதற்கான ஆணை பிறப்பிக்கப்படாத நிலையிலும் பல்வேறு முறை அவர்களது வீடுகளுக்கு விஜயம் செய்தல், தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்துதல், குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்துதல் ஆகிய நடவடிக்கைகளின் ஊடாக அவர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள்.

அதேவேளை கடந்த ஜுலை மாதம் ஆசிரியர்கள், தொழிற்சங்கவாதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கலாக நூற்றுக்கும் அதிகமானோர் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டதுடன், அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்கள். அவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டதன் பின்னரும் வற்புறுத்தலின்பேரில் 16 பேர் கொவிட்-19 தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

இவ்வாறானதொரு பின்னணியில் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் கல்வி உரிமைக்காகப் போராடும் செயற்பாட்டாளர்கள் மீதான பழிவாங்கல்கள் மற்றும் அடக்குமுறைகள் உடனடியாக முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

அத்தோடு தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செயற்பாட்டாளர்களின் உடலியல் மற்றும் உளவியல் நலனைக் கருத்திற் கொண்டு அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தைக் கோருகின்றோம்.

மேலும் பொது வெளியில் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வது உள்ளடங்கலாக அமைதியான முறையில் ஒன்றுகூடல் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தல் ஆகியவற்றுக்கான சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று அந்தக் கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment