நாடளாவிய ரீதியில் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பம் : சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 31, 2021

நாடளாவிய ரீதியில் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பம் : சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை முதல் செயலூட்டியாக மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்று 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளவர்களுக்கே மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெளிவுபடுத்துகையில், இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்று 6 மாதங்கள் நிறைவடைந்த பின்னரே மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்படும். இவ்வாறு தற்போது மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற தகுதியானவர்களுக்கு பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படும்.

இவ்வாறு தடுப்பூசி வழங்கும்போது இதற்கு முன்னர் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் வழங்கியபோது பின்பற்றப்பட்ட முறைமையே பின்பற்றப்படும்.

அதற்கமைய நோயாளர்களுடன் நேரடியாக நெருங்கிய சேவையை முன்னெடுக்கின்ற சுகாதார ஊழியர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினருக்கு முன்னுரிமையளிக்கப்படும்.

அதனையடுத்து விமான நிலைய ஊழியர்கள், சுற்றுலாத்துறை ஊழியர்களுக்கும், அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்படும்.

அதற்கு அடுத்ததாக 30 - 60 வயதுக்கு இடைப்பட்டோரில் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பின்னர் இந்த வயது பிரிவைச் சேர்ந்த ஆரோக்கியமானவர்களுக்கும், இறுதியாக 20 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் பைசர் தடுப்பூசியை மூன்றாம் கட்டமாக வழங்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment