அசாத் சாலியை நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 13, 2021

அசாத் சாலியை நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு உத்தரவு

(எம்.எப்.எம்.பஸீர்)

விளக்கமறியல் உத்தரவின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அசாத் சாலி சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் உள்ளிட்ட குழுவினருடன் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குனரத்ன நகர்த்தல் பத்திரம் ஊடாக முன் வைத்த வாதங்களை ஏற்றுக் கொண்டு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இதற்கான உத்தரவை சிறைச்சாலைகள் அத்தியட்சருக்கு பிறப்பித்தார்.

தனது சேவை பெறுநரான அசாத் சாலி, நீண்ட நாட்களாக விளக்கமறியலில் உள்ள நிலையில், அவருக்கு எதிரான வழக்கு நவம்பர் மாதமே விசாரணைக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன சுட்டிக்காட்டினார்.

எனவே நீண்ட கால விளக்கமறியலை கருத்தில் கொண்டு, அவரின் வழக்கை முன் கூட்டியே விசாரணைக்கு எடுக்குமாறும் அது தொடர்பில் ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுப்பது சிறந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனை ஆராய்ந்தே, அசாத் சாலிக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க தீர்மானித்த நீதிபதி, அன்றையதினம் அவரை மன்றில் ஆஜர் செய்ய சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக அசாத் சாலிக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றின் 2 ஆம் இலக்க நீதிமன்றில் 2778/21 எனும் இலக்கத்தின் கீழ் சட்டமா அதிபரால் பயங்கரவாத தடை சட்டம் மற்றும் ஐ.சி.சி.பி.ஆர். எனும் சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கே நவம்பரின் விசாரணைக்கு திகதியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது எதிர்வரும் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment