உரிய நேரத்தில் உரம் வழங்கப்படாது விட்டால் விளைச்சலில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் - தெளிவான விளக்கங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு : சந்திரகாந்தன் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 30, 2021

உரிய நேரத்தில் உரம் வழங்கப்படாது விட்டால் விளைச்சலில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் - தெளிவான விளக்கங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு : சந்திரகாந்தன்

விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப உரிய நேரத்தில் அங்கீகரிக்கப்பட்ட உரம் வழங்கப்படவில்லையென்றால் விளைச்சலில் பாரிய வீழ்ச்சி ஏற்படும். ஆகவே உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.

மாவட்ட விவசாயிகளுக்கான உரம் வளங்களில் உள்ள இடர்பாடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் புதன்கிழமை (27) இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

மேலும் அவர் குறிப்பிடுகையில், மட்டக்களப்பு மாவட்டம் விவசாயத்தையும், மீன்பிடியினையும் ஜீவனோபாயமாக கொண்டு செயற்படுகின்ற மாவட்டமாகும். இங்கு அதிகமான விவசாயிகள் பெரும்போக நெற் செய்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இவ்வருடம் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற் செய்கை இடம்பெற இருக்கின்றது. இந்நிலையில் அவர்களுக்கான உரம் வழங்கப்பட வேண்டியதை உறுதிப்படுத்த வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும்.

நஞ்சற்ற உணவு உற்பத்தியினை ஏற்படுத்தும் நோக்கோடு அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற இந்த செயற்பாடுகள் கூடிய வகையில் மக்களையும் விவசாயிகளையும் சென்றடைய வேண்டும். அவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும். எவ்வாறு சேதனப் பசளை பயன்படுத்துவது? என்பது தொடர்பான தெளிவான விளக்கங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும்.

சேதனப் பசளை உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கு அதற்கான கொடுப்பனவுகளை துரிதமாக வழங்குவதுடன், சேதனப் பசளை கொள்வனவு செய்வதற்கான மானிய கொடுப்பனவுகளும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வருடம் ஒன்றிற்கு 50 ஆயிரம் தொடக்கம் 60 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் பாவனைக்கு தேவையாக இருப்பதுடன், மேலதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்ற நெல் வெளிமாவட்டங்களுக்கும் ஏனைய இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இம்முறை சேதனப் பசளை மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற நெல்லுக்கு, பெருமளவான இலாபத்தை சம்பாதிக்க கூடிய சூழல் உருவாகும். 

அரசினால் மாவட்டத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட உரங்கள் கொண்டுவரப்பட்டபோது காலதாமதம் இல்லாமல் அதிகாரிகள் உடனடியாக அதனை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

(வெல்லாவெளி நிருபர்)

No comments:

Post a Comment